வன்னியெங்கும் அவல வாழ்வு:கம்பன் கழகமோ வம்பு வளர்க்கின்றது!


வன்னியெங்கும் அடை மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் திண்டாட கொழும்பில் கம்பன் களமோ அடுத்து யாரிடம் விடுதலைப்போராட்டத்தை கையளிப்பதென பட்டிமன்றம் நடத்தியுள்ளது.

ஊடகத்துறையினர் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டு மண்டபங்கள் வழங்கப்படாத நிலையில் ஆலய மண்டபமொன்றில் தமது எடுபிடிகள் சகிதம் அரசியல் ஆய்வு பட்டிமன்றத்தினை நடத்தியுள்ளனர்.

அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு 'சொல்விற்பனம் எதிர்காலத் தமிழினத் தலைமைக்குத் தகுதிவாய்ந்த அரசியற் கட்சி..?" எனும் மகுடத்தின் கீழ் நடந்திருந்தது.

டக்ளஸ்,சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன்  உள்ளிட்ட ஒட்டுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சயந்தன்,ஊறுகாயாக முன்னாள் முதலமைச்சரது சார்பில் அருந்தவபாலனும் பங்கெடுத்த இப்பட்டிமன்றம் மிகக்குறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியுள்ளது.

இதனிடையே வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழை தற்போது குறைவடைந்துள்ளதுடன் வெள்ள நீர் வடிந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள் பொது மண்டபங்கள் உட்பட பல இடங்களில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை மூவாயிரத்து 338 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் புநகரி தவிர்ந்த ஏனைய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 21 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 556 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 68 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களைச் சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களை அடுத்து மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வீடொன்றில் தங்கியிருந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவர் மின்கசிவு காரணமாக பலியாகியுள்ளார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட மழைப்பொழிவினால் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. முறிப்புப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் முறிப்புக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து ஆற்றின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் குறிப்பிட்டார். இதனால் முறிப்புப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணைக் கிராமத்தினுள் நீர் உட்புகுந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், சமூகமட்ட அமைப்புகளின் உதவியுடன், அப்பகுதியில் வசிக்கின்ற 35 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழையினால் தலைமன்னாரில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான 'பெல்வேறி' கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான பெல்வேறி கிராமத்தைச் சேர்ந்த 38 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்கள் இடம்பெயர்ந்து பொது மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

அத்துடன் வங்காலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களுடைய 12 படகுகளும் சேதமாகியுள்ளன.

No comments