அங்கஜனின் பெயர்ப்பட்டியலுக்கே மரக்கன்று விநியோகம் - விவசாயிகள் கவலை

விவசாய அமைச்சினால் நாடு முழுவமும் 10 லட்சம் பழ மரச் செய்கைத் திட்டத்தின் கீழ் வடக்கில் முன்னெடுக்கும் திட்டத்தினை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமனாதனின் குழுவினர் குழப்பியடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள் குறித்த மரக்கன்றுகள் குறித்த கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே  வழங்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

10 லட்சம் பழ மரச் செய்கையின் கீழ் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சம் வரையான மரக்கன்றுகள் கமநல சேவை நிலையங்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட மரக் கன்றுகள் கமநல சேவை நிலையங்களினால் தயார் செய்யப்பட்ட பட்டியலின் ஊடாகவோ அல்லது தேவையானோர் பகுப்பாய்வு செய்யப்பட்டோ வழங்கப்படவில்லை. இதேநேரம் கமநல சேவைநிலையங்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட மரங்கள் காத்திருக்கின்றன.

விவசாயிகள் விவசாய அமைப்புக்கள் சென்று கேட்டால் வழங்க மறுக்கின்றனர். அது தொடர்பில் விபரம் கோரினால் இதனை யார் கொண்டுவந்து இறக்கினார்களோ அவர்களே பெயர்ப் பட்டியலினையும் அனுப்புகின்றனர். அதற்கு மட்டுமே விநியோகிக்க முடியும் என்பதே நிபந்தனையாகவுள்ளது. அதனால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது. நாங்கள் வெறும் காவலாளிகள் மட்டுமே என்கின்றனர்.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடப்படுவது தொடர்பில் கமநல சேவை ஆணையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவும் அரசியல் சர்ச்சைக்குள் அகப்பட்டுள்ளமையினால் எம்மால் பதிலளிக்க முடியவில்லை. இருப்பினும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரின் ஊடாக சீரான அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் எம்மால் நேர்த்தியான பட்டியல் தயாரித்து தேவையின்பொருட்டி நாடிவரும் விவசாயிகளிற்கு கட்சி பேதம் இன்றி வழங்க முடியும் என்றார்.

No comments