நாடாளுமன்றக் கலைப்பு - இடைக்காலத்தடை சனி வரை நீடிப்பு


நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி, பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் 8 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை  இரத்துச் செய்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, விசாரித்த உச்சநீதிமன்றம், அரசிதழ் மீது நாளை வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.இந்த அடிப்படை உரிமை  மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது, தனது வாதங்களை முன்வைத்த சட்டவாளர் அலி ஷார்பி, தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, நாடாளுமன்றத்தைக் கலைப்பது தான் ஒரே தீர்வு என்று கூறியிருந்தார்.

அதேவேளை உதய கம்மன்பில சார்பில் முன்னிலையான சட்டவாளர் மனோகர டி சில்வா, அரசியலமைப்பின் 33 ஆவது, 62 (2) ஆவது மற்றும்  70 ஆவது பிரிவுகள், ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக இருப்பதாகவும், இதுகுறித்து  உச்சநீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறும் கோரினார்.

இந்த நிலையில், விசாரணைகள் இன்று முடிவடையாத நிலையில், நாளைக்கு விசாரணையை வைத்த 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம், ஜனாதிபதி வெளியிட்ட அரசிதழுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நாளை மறுநாள் வரை நீடிப்பதாகவும் அறிவித்தது.

No comments