நாளை பதவி விலகுகிறார் மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை நாளை சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் விடுக்கவுள்ளார்.

மேற்படி தகவலை மஹிந்த ஆதரவு அணி எம்.பியான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பிக்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ஷவும் இதில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியமைப்பதற்குரிய அனுமதியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தால், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையும் கலைந்துவிடும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையைவென்ற ஒருவரை பிரதமராக நியமித்து, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் உறுதி நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ மேற்படி முடிவை எடுத்தார் என்று அவரின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments