யாழ்.மாநகரசபை:தொடங்கியது வேட்டை!


தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி ஆட்சியின் கீழுள்ள யாழ்.மாநகர சபையில் தமது வருவாயை பெருக்க அரசியல் தரப்புக்கள் நிறைவேற்றவிருந்த வரவு செலவு திட்டம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்ட முன்வரைபில் வெளிநாடு செல்வதற்கும் ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்தரப்பான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தியுள்ளது.

மாநாகரசபை உறுப்பினர்கள் வெளிநாடுகளிற்கு கல்வி சுற்றுலா செல்லவென ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை செலவீன மதிப்பீடு 2019 இனில் இதன் பிரகாரம் கடல் கடந்த பயிற்சி செலவாக முதல்வர் மற்றும் உறுப்பினர்களிற்கென ஒரு கோடியும், முதல்வர் மற்றும் உறுப்பினர்களது தொலைத்தொடர்பு மற்றும் படிகளாக ஒரு கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உறுப்பினர்களது வருட இறுதி பார்ட்டி நிகழ்வுக்கு ஒன்றரை இலட்சமும், பொதுக்கூட்ட உணவுக்கு  மூன்று இலட்சமும், முதல்வர் உபசரணை க்கென 5 இலட்சமும் தினக்குறிப்பு புத்தகம் 100,000.00 ,நினைவு சின்னம் வழங்கல் மற்றும் உள்ளூராட்சி வாரத்திற்கு பத்து இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகர மண்டபம் என்ற பெயரில், முதல்வர் ஆனோல்ட்டிற்கு வாசஸ்தலம் நிர்மாணிக்க 12.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இவ்வாறாக யாழ்.மாநகர சபையின் மொத்த செலவீனம் சுமார் 91 கோடியென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவு திட்டத்தை திருத்தக் கோரியுள்ளது.

இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னணி சார்பு உறுப்பினர்கள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர்.

No comments