பளை வைத்தியசாலை வடக்கின் முன்னுதாரணம்!


நான் அரசியலுக்கு வந்த போது எதிர்பார்த்த ஒரு சமூகப் புரட்சி எம் கண்முன் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. அதாவது எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை நாம்எதிர்பார்த்து அதன் தாமதத்தால் எமது முன்னேற்றம் தடைப்படுவதைத் தடுக்க அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் கைகோர்த்து அந்தந்தப் பிரதேசத்தில் அரசாங்க – தனியார் கூட்டு முயற்சிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தேன் அது பளை பிரதேச வைத்தியசாலையில் காணக்கிடைத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை பளை வைத்தியசாலையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக பங்கெடுக்கையில்  முதன் முதலில் இது பற்றி என் அலுவலர்களுடன் நான் பேசியதில் அதற்கு நிர்வாக ஒழுங்கு விதிகள், மற்றும் நிதி பற்றிய ஒழுங்கு விதிகளில் தடை இருப்பதாகக் கூறியிருந்தார்கள். ஆனால் அவ்வாறான தடைகளைத் தகர்த்தெறிந்து இங்கு ஒரு சமூகப்புரட்சி நடந்து வருவதைக் காண்கின்றோம். அலுவலர்களும் பொது மக்களும் சேர்ந்து பொது நன்மைக்காக உழைத்தால் இவ்வாறான சமூக மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம். வட கிழக்கு மாகாணங்களில் நாம் எல்லாத் துறைகளிலும் சுய பூர்த்தியை நோக்கிப் பயணிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 

அரச நிறுவனங்களுக்கு ஊடாக பொது மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குவது கடினமானது என்ற எழுமாற்றான கருத்தை முறியடிக்கும் விதத்தில் பளை பிரதேச வைத்தியசாலையின் ஊடாக அங்கு கடமையாற்றுகின்ற வைத்திய அதிகாரிகளும்,ஊழியர்களும், பளைப் பிரதேச மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் இருந்து வருகின்ற மக்களுக்கும் தரமான ஒரு சேவையை வழங்க முன்வந்துள்ளார்கள். கடந்த நான்கு வருடங்களில் மிகச் சிறப்பாக அவர்களின் முயற்சி முன் எடுக்கப்பட்டு அரச திணைக்களங்களும் மக்கள் அனுசரணையுடன் தனியார் நிறுவனங்களை விட சிறப்பாகச் செயற்பட முடியும் என்பதை செயன்முறையில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.இந்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, ஏனைய வைத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்ஆகிய அனைவருக்கும்எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் முதற்கண் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். 

இந்தப் பிரதேச வைத்தியசாலை பற்றி சாவகச்சேரியில் இருந்து வருகை தரும் மாவட்ட நீதிபதியாக 1980களில் கடமையாற்றிய காலத்திலிருந்தே ஓரளவு அறிந்திருக்கின்றேன். அக்காலத்தில் இந்த வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி உட்பட மூன்று வைத்தியர்கள் கடமையாற்றினார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களுள் ஒருவர் சுஆP ஆக இருந்தார். இதனுடன் இணைந்த மகப்பேற்று வைத்தியசாலை ஒன்றும் பளை பஸ் நிலையத்திற்கு அண்மையில் இயங்கி வந்தது. அக் காலத்தில் கடமையாற்றிய மருத்துவிச்சிமார் வைத்திய அதிகாரிகளின் அனுபவத்திற்கு ஒப்பான அனுபவத்தை கொண்டிருந்தமையால் அவர்களே பல மகப்பேற்றுக்களை அந்த காலகட்டத்தில் நிறைவு செய்து வந்தார்கள். 
2009ம் ஆண்டில் இப்பகுதிகளில் இடம்பெற்ற கடுமையான யுத்தத்தின் விளைவாக இந்த வைத்தியசாலை முற்றாக அழிவடைந்த நிலையில் இதனை மீளப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவ் வேலைத் திட்டங்கள் மந்த கதியிலும் முழுமையற்ற நிலையிலும் காணப்பட்டன. இவ் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக டாக்டர் சிவரூபன் அவர்கள் வந்த பின் அவரின்மக்கள் மயப்படுத்தப்பட்ட சிந்தனையின் விளைவாக 2015ம் ஆண்டில் இருந்து இவ் வைத்தியசாலையின் தர முகாமைத்துவத்தை 100சதவீதம்பேணுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தார். இப் பகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய வைத்திய சேவைகளை திறம்பட ஆற்றுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் இப் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் நல் ஆதரவைப் பெற்றுக்கொண்டன. அவர்களின் பங்களிப்புக்கள்நிறைவாக கிடைக்கப்பெற்றதால்நான் குறிப்பிட்ட அந்த சமூகப்புரட்சி இன்றும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. அதாவது அரச திணைக்களங்கள் என்பன மந்த கதியில் சேவைகளை இழுத்தடிப்புச் செய்கின்ற நிறுவனங்களேஎன்ற நிலை மாறி மக்கள் அனுசரணையுடன் அவர்களுக்குரிய வளங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக சேவையாற்ற முடியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள் இங்குள்ள அனைவரும். 

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றி நான் பல இடங்களில் உரையாற்றியிருக்கின்றேன். நல்லதொரு தலைவன் கிடைத்தால் எந்த ஒரு நிறுவனமும் முன்னேற முடியும். ஒரு தலைவர் கொடுக்கின்ற அன்பும், அறிவும்,கண்டிப்பும்,ஆற்றலும், புரிந்துணர்வும் நிறுவனங்களை மாற்றி அமைப்பன. ஒரு பாடசாலை சிறப்பான நிலைக்கு உயர்வு பெறுவதற்கு அப் பாடசாலையின் அதிபரின் அப்பழுக்கற்ற சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் 10 வருட காலங்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுமாயின் அப் பாடசாலை உயர் நிலையை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுவார்கள்.அதற்கு உதாரணமாக சில பாடசாலைகளைப் பெயர் குறிப்பிட்டும் பேசியுள்ளேன். 

அதே போன்று தலைமைத்துவம் கொடுக்கும் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் மிகப் பொறுப்புடன் செயற்படுகின்ற போது வைத்தியசாலைகளின் தரம் எவ்வாறு உயரும் என்பதற்கு இந்த வைத்தியசாலை நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது. இதனைப் பார்க்கின்ற போதுஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.யாழ் போதனா வைத்தியசாலையில் அவ் வைத்தியசாலையின் அத்தியட்சகரின்அதிரடி நடவடிக்கைகள்ஏனைய வைத்திய அதிகாரிகளையும் ஊழியர்களையும் மன உழைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலும்காலப் போக்கில் அவரின் செயற்பாடுகளின் நன்மைகள் உணரப்படும் போது அவர்களும் சேர்ந்து அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இன்புற்றிருப்பார்கள் என்றே நம்புகின்றேன். ஆனால் இச் செயற்பாடுகள் சுயநலம் கருதாது பொதுமக்கள் நலன் கருதி நடைபெற வேண்டும். அங்கு தான் சமூகப்புரட்சி அடங்கி இருக்கின்றது. மக்கள் நலம் வேண்டி மக்களுக்காக உழைக்கின்றோம் என்ற அந்த உணர்வே சமூகத்தில் மன மாற்றங்களையும் மாற்றுச் சிந்தனைகளையும் எழுப்புவன. சேவை செய்ய அனைவரையுந் தூண்டும் வல்லமையுடையது அந்தச் சிந்தனை. 

அரச திணைக்களங்கள் என்றவுடன் அவற்றோடு தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்கள் கூட எவ்வாறு சேவையாற்றுகின்றன என்பதை இலகுவாக அறிந்து கொள்வதற்கு இந்த வைத்திய அதிகாரி ஒரு சிறுவிடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்த வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி இரண்டு வருடங்களுக்கு மேலாக வாகனத் திருத்துமிடத்தில் போடப்பட்டிருந்துள்ளது. அந்த வண்டிக்கு முழுமையான காப்புறுதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ள நிலையில் கூடஅதன் திருத்த வேலைகள் இன்னும் முடிவுறுத்தப்படாதிருந்தது. அதே நேரம் இந்த வைத்திய அதிகாரியின் பிரத்தியேக வாகனம் விபத்துக்குள்ளாகிய போது அதே காப்புறுதி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு கிழமைகளுக்குள் வண்டி முழுமையாக சீர் செய்யப்பட்டு விட்டது. என்னுடைய அலுவலர்களுடன் உரையாடும் போது அந்தக் காரைத்தற்போது தான் கழுவிக் கொண்டிருப்பதாக அவர்களுக்குவைத்திய அதிகாரி வேடிக்கையாகத் தெரிவித்திருந்தார். ஒரே காப்புறுதி நிறுவனம் அரச திணைக்கள வாகனத்திருத்தத்தை இரண்டு வருடங்களுக்கு இழுத்தடித்து அரச அதிகாரியின் வாகனத்தை இரண்டு வாரத்தினுள் திருத்திக் கொடுத்தது. அரச திணைக்களங்களுக்கான சேவைகள் இவ்வாறு தட்டிக்கழிக்கப்பட்டு வருவது அதிகாரிகளின் சிரத்தை இன்மையாலேயே. அரசாங்கம் வேறு நாம் வேறு என்ற வெள்ளையார் காலத்து சிந்தனையே இப்பொழுதும் எம்மிடையே பரந்திருக்கக் காண்கின்றேன். நாமே அரசாங்கம், அரசாங்கமே நாம் என்ற எண்ணம் மேலோங்கும்; போது தான் அங்கு ஒரு சமூகப்புரட்சி ஏற்படுகின்றது. சுய தேவைப்பூர்த்தியில் நாங்கள் ஈடுபட்டால் அதன் பொருட்டு சமூக மாற்றம் ஏற்படும் என்பதை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு வட்டாரமும் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். மற்றவர்களை எதிர்பார்க்கும் இந்தக் காலம் மலையேற வேண்டும். 

இந்த வைத்தியசாலையில் முன்னர் சராசரியாக 30 நோயாளர்கள் மட்டிலேயே வைத்திய உதவிகளை பெற்று வந்த போதும் தற்போதைய முயற்சியின் பலனாக சுமார் 200ற்கும் அதிகமான நோயாளர்கள் தினமும் வைத்திய உதவிகளை நாடி இங்கு வருகின்றார்கள் என்று கேள்விப்படுகின்றேன். உள்ளூர் நோயாளிகள் மட்டுமன்றி மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்தும் கூட நோயாளர்கள் இந்த வைத்தியசாலையை நாடி வருகின்றார்களாம். மாதகல்ப் பகுதியில் இருந்து ஒரு நோயாளர் இங்கு வருகை தந்து வைத்தியசாலை விடுதியில்இருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவை எல்லாம் இந்த வைத்தியசாலையின் அனைத்துத் தர வைத்தியர்கள்,அலுவலர்கள், ஊழியர்களின் அப்பழுக்கற்ற சேவையின் காரணமாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களே அன்றி வேறில்லை. தலைமை வைத்திய அதிகாரியின் உணர்வும் உத்வேகமும் மற்றையோரையும் சுறுசுறுப்படைய வைத்துள்ளது என்று கூறலாம். உங்கள் எல்லோரதும் சேர்ந்த ஒத்துழைப்பே இன்று எமது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 

அரச நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் மிகக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்ற போதும் உங்களின்தன்நிறைவு நோக்கிய சேவை மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வைத்தியசாலைக்கான சிற்றுண்டிச்சாலையை ஸ்ரீபதி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பொறுப்பேற்று நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்கள். அதே போன்று வடமாகாணசபை முன்னாள்உறுப்பினர் நண்பர் கௌரவ அரியரட்ணம் அவர்களின் நிதி உதவியில்நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலைக்கான வீதியை ஏ.வி.எம் பண்ணை அமைத்துக் கொடுத்துள்ளது. வைத்தியசாலை நுழைவாயிலை பிரதேச மக்கள்தத்தமது நிதிகளில் இருந்து அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள் என்று அறிய வருகின்றது. இவர்கள் யாவரும் பாராட்டுக்குரியவர்கள். 

அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டக் கூடிய செயற்பாடாக அமையும்.தமிழ் மக்களை ஓரங் கட்டுகின்றஇலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக எமது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு எமது அரச அதிகாரிகள் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனைப் படம் போட்டுக் காட்டுகின்ற ஒரு செயற்பாடாகவே நான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கின்றேன். அரசாங்க அதிபர்களும், மாவட்ட செயலாளர்களும், கிராம சேவையாளர்களும் சட்டத்தால் பிரித்தெடுக்கப்பட்டிருந்தாலும் சதையால் அவர்கள் எம்மவர்கள் என்பதை நாங்கள் மறந்து விடலாகாது. மாகாணமும் மத்தியும் அவர்கள் ஊடாக எம்மிடையே  மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும். 

பொது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டஎமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் ஏன் சில அலுவலர்களுந்தான் தம்மை எவ்வாறு வளப்படுத்திக்கொள்ள முடியும் என்றே சதா சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே இன்றைய யதார்த்த நிலை. இந்தச்சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த வரவேற்பை மக்களிடம் இருந்து பெறுவன என்று எதிர்பார்க்கலாம். 

வடமாகாண முதலமைச்சராக சேவையாற்றிய எனது சேவைக்காலம் முடிவுற்ற நிலையிலும் முதலமைச்சர் பதவி அற்ற நிலையிலும் என்னை இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைத்திருப்பது எனக்கு மகிழ்வைத் தருகின்றது.இந்த வைத்தியசாலைச் சமூகம் என்ன மனநிலையில் செயற்படுகின்றதோ அதே மனநிலையில்த்தான் நானும் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய அனைத்து உரித்துக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளேன். 

இன்றைய அரச அலுவலர்களின் மனங்களில் சிந்தனைத்தெளிவு ஏற்பட வேண்டும். தம்மை வளப்படுத்துவதையும் அரச நிதிகளைக் கபளீகரம் செய்வதையும்முதன்மையாகக் கருதாது ஒவ்வொரு திணைக்களமும் தமக்குக் கிடைக்கின்ற நிதிகளை முழுமையாக மக்கள் சேவைகளுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் முறையாக உபயோகிக்க முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் பெருந்தொகையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.ஆனால் அந்த நிதியில் எவ்வளவு பங்கு தமக்குக் கிடைக்கும் என்றே இடை நிலையில் இருக்கும் பலர் எதிர்பார்க்கின்றார்கள்.உண்மையில் தந்துதவும் நிதியை மக்கள் நலம் வேண்டி முழுமையாகப் பயன்படுத்தினால் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மேலாகவும் உதவிகளை வழங்க முடியும் என்பதைப் பல அதிகாரிகள் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள். 

சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள். ஒரு படுக்கை அறையுடன் சாதாரண வீடொன்றிற்கு இருக்க வேண்டிய சகல வசதிகளையும் கொண்ட வீடுகளை தலா மூன்று இலட்சத்திற்குள் கட்டி முடித்து வருவதாகக் கூறினார்கள். வீட்டைப் பெற இருக்கும் மக்களின் ஒத்தாசையுடன் இதைச் செய்துள்ளதாகக் கூறினார்கள். மக்களின் ஆதரவு பெற்றுச் செய்யும் எந்த ஒரு கைங்கரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம் என்பதைக் குறித்த நிறுவனக் காரரின் செயல்களில் இருந்து தெரிந்து கொண்டேன். 

எனவே மக்களின் மனங்களில் சிந்தனைத் தெளிவு ஏற்பட வேண்டும். அரச அலுவலர்களும் மக்களும் ஒருவர்க்கொருவர் முரண்பட்ட பிரிவினர் அல்ல பொதுமக்கள் நலனுக்காக இணைந்து செயலாற்ற வேண்டியவர்கள் இரு தரப்பாரும் என்பது உணரப்பட வேண்டும். மக்களுக்கான நல்ல பல திட்டங்களைச்செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும். சிறப்பான இணைந்த கைங்கரியங்களை மேற்கொள்ளுகின்ற போது இன்றைய நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் அனைத்துத் திணைக்களங்களிலும் இடம்பெற வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான கூட்டு முயற்சியினால் மக்கள் மனங்களில் உங்கள் சேவைகள் பற்றிய ஒரு உயர்ந்த கௌரவம் எந்நாளிலும் நிலைபெறும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.இந்த வைத்தியசாலையைச் சிறப்பாக நடத்துவதில் தாமும் பங்குதாரர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கும். 

இந்த நல்ல கைங்கரியத்தை சிறப்புற ஆற்றிய இந்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, ஏனைய வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரையும் மனமார உளமாரப் பாராட்டுகின்றேன். பளைப் பகுதியில் உள்ள சிறந்த சேவையாளர்களைக் கௌரவிப்பதில் இவ்வூர் மக்கள்என்றும் பின் நின்றதில்லை. இப் பகுதிகளில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இங்கு கடமையாற்றிய பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு “கடவுள்” என்ற பட்டப் பெயரை வழங்கி இருந்தார்கள். அவரை “கடவுள்” என்று அழைத்தால்த்தான்மக்களால் அடையாளம் காணக்கூடியவராக அவர் பெருமைப்படுத்தப்பட்டிருந்தார்.அதே போன்ற சிறந்த கௌரவம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும்.இன்றைய வைத்திய அதிகாரியின் முறையான வழி காட்டலில் உருவாகிய நீங்கள், தற்செயலாக அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் அதன் பிறகும் இதே நிலையில் இந்த வைத்தியசாலையைப்பேண முன்வர வேண்டும். வரும் புதிய வைத்திய அதிகாரியையும் மக்கள் நலம் சார்ந்து ஒழுக வைக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும். அதே போன்று இடமாற்றம் பெற்றுச் செல்லுகின்ற வைத்திய அதிகாரியும் தாம் புதிதாக பொறுப்பேற்கின்ற வைத்தியசாலையை இதே போன்று தரமுயர்த்த முன்வர வேண்டும் என விநயமாக வேண்டிக்கொள்வதாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments