முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை!


மாவீரர் தினத்தை குழப்பமுற்பட்ட காவல்துறையினரே பழிவாங்கும் நோக்கில் கொல்லப்பட்டனாராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.இதனை முன்னிறுத்தி விசாரணைகளை காவல்துறை முன்னெடுப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

மேலும், இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் பல கோணங்களில் புலனாய்வு பிரிவு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் காவல்துறை வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர்; இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், சம்பவத்தை அடுத்து காவல்துறை அதிபர் நேரில் விஜயம் செய்ததுடன், 7 பேர் கொண்ட விசேட புலனாய்வு பிரிவு குழுவை கொழும்பில் நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க. பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இதனிடையே கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவருடன் மட்டு. தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments