பதவிக்கு ஆபத்து - இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் கூட்டமைப்பு எம்.பிக்கள்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை விரைவில் கைவிடவுள்ளனர் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால், கீதா குமாரசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்புச் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்திருந்தது.

எனினும் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையிலேயே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது வெளிநாட்டுக் குடியுரிமையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கைவிடவுள்ளனர் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments