மோடன் மலம் மிதித்த கதையே மைத்திரியின் ஓரங்கக் கூத்து! பனங்காட்டான்

மகிந்தவைப் பதவியிறக்க 113 எண்ணிக்கை தேவை. இதில் மகிந்த தோல்வியடைந்தால், ரணிலைப் பிரதமராக்க 113 சத்தியக் கடதாசிகள் தேவை. இரண்டுமே மைத்திரி விருப்புக்கு ஏற்றவாறு நடைபெறவில்லையானால் நாடாளுமன்றம் டிசம்பர் 7 வரை ஒத்திவைக்கப்படுமா அல்லது இடைக்காலப் பிரதமர் ஒருவர் நியமனமாவாரா?

கடந்த மாதம் 26ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி எனக் கூறப்படும் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த பொம்மலாட்டம், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து குத்தலாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

இதனை எழுதும் நேரம், நவம்பர் 15ஆம் திகதி வியாழக்கிழமை இரவின் அரசியல் போக்கு, இதனை வாசிக்கும் வேளையில் சில மாற்றங்களைக் கண்டிருக்கும். சிலவேளை அடியோடு தலைகீழாக மாறியுமிருக்கலாம்.
எது எப்படி எந்த நேரம் மாறுமென்பது இதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மைத்திரிக்கே தெரியாதிருக்கும் என்பதுதான் இதிலுள்ள விண்ணாணம்.

இலங்கையை 1978இல் குடியரசாக மாற்றும்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமக்கு வசதியான ஒன்றாக உருவாக்கிக் கொண்டார்.

இலங்கையில் அரசாங்க கடமையிலுள்ளவர்கள் ஓய்வுபெறும் வயது 55. ஆனால், ஜெயவர்த்தன ஜனாதிபதியாகும்போது அவருக்கு வயது 72. வயோதிப நிலையில் தமக்கான ஜனாதிபதிப் பதவியை உருவாக்கிய அவர், இரண்டு தடவைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்க மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்டதால், ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகளாக மட்டுமே நிர்ணயித்தார்.
மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதிப் பதவிக்கு வரும்போது அவருடைய வயது 60. அதனால், மூன்றாவது தடவையாகவும் (70 வயதுக்கு மேல்) ஜனாதிபதியாகும் ஆசையினால் 18ஆவது அரசியல் திருத்தத்தைக் கொண்டுவந்து அதன்வழியாக தேர்தலில் குதித்து முகம் குப்புற விழுந்தார்.

ஆனாலும், அரசியல் கதிரை மீதான பேராசை அவரைவிட்டுப் போகவில்லை. இதனால், 2015 ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஓர் உறுப்பினர் ஆனார்.

இவருக்கு முன்னர் ஜனாதிபதிகளாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், டி.பி.விஜேதுங்கவும், சந்திரிகா குமாரதுங்கவும் ஓய்வுபெற்ற பின்னர் நாகரிகமாக நேரடி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
ஆனால், மகிந்தவுக்கு மேலும் மேலும் பல கதிரைகளில் ஆசை பெருகியது.

எதிர்பார்த்த சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரண்டும் கைக்கு எட்டவில்லை. சரியான நேரத்தில் சரியாகப் பொறிவைத்து மைத்திரியை மயக்கி (அல்லது மடக்கி) கடந்த வாரம் 26ஆம் திகதி நியமனப் பிரதமரானார்.
இப்போது இவரது நியமனத்தின் மொத்த நாட்களை நாடாளுமன்றம் விரல்களால் எண்ணிக்கொண்டிருக்கின்றது (சிலவேளை இப்போது எண்ணிக்கை முடிந்திருக்கலாம்).

தம்மைச் சாதாரண ஒரு விவசாயியின் மகனாகவும், தமக்கு அரசியலில் எதுவும் தெரியாதவனாகவும், பல சந்தர்ப்பங்களில் தமது வேண்டுகோள்களை உதாசீனம் செய்து வந்ததாகவும் ரணில் மீது குற்றங்களை பூடகமாகச் செலுத்தி அண்மையில் மைத்திரி நிகழ்த்திய உரை ஊடகங்களில் வெளியானது.

இதில் உண்மையில்லாமலில்லை. பல பொது நிகழ்வுகளில் இருவரும் மேடைகளில் அமர்ந்திருக்கும்போது அவர்களது உடல்மொழிகள் இதனை வெளிச்சம் போட்டுக் காட்டின.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன,; அரசியலில் ‘கிங் மேக்கர்’ என்ற பாகத்தை வகித்த எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் புதல்வன், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா டி.ஆர்.விஜேவர்த்தனவின் பேரன், டட்லி சேனநாயக்கவின் சகோதரரின் புதல்வியைத் திருமணம் செய்த றஞ்சித் விஜேவர்த்தனவின் மருமகன், ஒரு வழக்கறிஞர், 1977இலிருந்து ஒரு தடவைகூட தோல்வியடையாத நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களில் எப்போதும் அமைச்சர் பதவிகள் – எதிர்க்கட்சித் தலைவர் பதவி – பிரதமர் பதவிகளை வகித்தவர், ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற பல மேல்தட்டு வர்க்க அரசியல் தகமைகள் ரணிலுக்குண்டு.

இவை எதுவுமே இல்லாத மைத்திரியை ஒரு பூச்சி அல்லது ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் ரணில் மதித்து வந்தார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

ஆனால், இவை அனைத்தையும் நன்கு தெரிந்துகொண்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விட்டுக்கொடுத்த பதவிக்குப் போட்டியிட்டு, அவரது கட்சியின் வாக்குகளையும் பெற்று ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவானதை மைத்திரி திடீரென மறக்க நேர்ந்த காரணம் என்ன?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் மட்டுமே இருக்கும் வேளையில், ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் தனித்துப் போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் பகிரங்கமாகக் கூற ஆரம்பித்ததால் ஏற்பட்ட ஏமாற்றம், மைத்திரியின் இன்னொரு தடவைக்கான எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியதே காரணம் என்றால் அதில் தவறிருக்க முடியாது.

இந்தப் பின்னணியில்தான் பிரதமர் பதிவியிலிருந்து ரணிலை நீக்க மைத்திரி விரும்பினார்.

அப்படியானால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வேளையில் தம்மைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டிய மகிந்தவை எவ்வாறு மீண்டும் தம்முடன் இணைத்து பிரதமராக நியமித்தார் என்ற கேள்வி எழலாம்.
இதற்குப் பல காரணங்களுண்டு:

1. எதிரியின் எதிரி நண்பன் என்ற அரசியல் சூத்திரம் முதலாவது (மகிந்த எதிர் ரணில்).

2. 19ஆவது அரசியல் திருத்தமானது மகிந்தவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வராது தடுக்கும் எனும் சாதகமான நிலைமை.

3. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்ச போட்டியிடலாமென்ற எதிர்வுகூறலிலிருந்து அவரைத் தவிர்க்க வைப்பது.

4. கடந்த நாடாளுமன்ற, ஜனாதிபதி, உள்ளூராட்சித் தேர்தல்களில் சிங்கள மக்களின் அதிக வாக்குகள் மகிந்தவுக்குக் கிடைத்ததால், அந்த வாக்குகளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமதாக்கிக் கொள்வது.

இந்த நான்கையும் தவிர வேறு பல காரணிகள் இருப்பினும், இந்த நான்கும் மீண்டும் ஜனாதிபதியாகப் போதுமானவை என்பது மைத்திரியின் கணிப்பு.

இவைகளைத் தமது பலமாக மட்டும் கணக்கிட்ட மைத்திரி, தமது முதலாவது எதிரியாகப் பார்க்கும் ரணிலின் பலத்தை எடைபோட மறந்து விட்டார்.

ரணிலை ஆட்சித் தரப்பிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், தாம் பிரதமராகி – ராஜபக்ச குடும்ப அரசியலை நிலைநாட்டினால், ஊழல் மற்றும் மோசடி வழக்குகளிலிருந்து தப்பிவிடலாம் என்பது மகிந்தவின் முதல் இலக்காகவிருந்தது.

கடந்த மூன்று வாரங்களுக்குள் ஓரளவுக்கு அதனை அவர் ஆரம்பித்திருந்ததையும் காணலாம்.

கோடிக்கணக்கான பணம் கைகள் மாறியதாயினும், எதிர்பார்த்த 113 எண்ணை அவரால் பெறமுடியாது போயிற்று.

பணத்தைப் பார்த்து ஓடிவந்தவர்கள் அதனைப் பெற்ற பின்னர் தங்களது பழைய வீட்டுக்குத் தாவிவிட்டனர்.

மந்திரிப் பதவிகளும் மந்திப் பாய்ச்சல்களும் மைத்திரியின் அனுபவமற்ற நாடாளுமன்றக் கலைப்பினால் முடிவுக்கு வந்தது.

இராஜாங்க மந்திரிகளும் பிரதி மந்திரிகளும் (வியாழேந்திரன் உட்பட) இலங்கை அரசியல் வரலாற்றில் 14 நாட்களுக்கான ‘முன்னாள்’களாகிவிட்டனர்.

இதனால், ஊடகத்துறைக்குப் பொறுப்பாக நியமனமான மகிந்தவின் கைப்பொம்மைகளில் ஒருவரான கெஹலிய ரம்புக்கொலவின் பதவியும் பறிபோனது மகிந்த எதிர்பாராதது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழர் முற்போக்கு முன்னணி ஆகிய சிறுபான்மையினரின் அரசியல் கட்சிகள் ரணில் தரப்பிலிருந்து அசைய மறுத்தது மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் கிடைத்த படுதோல்வி.

நாடாளுமன்றக் கலைப்புக்கு உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்காலத் தடை இவர்களுக்கான இரண்டாம் தோல்வி.

சட்டத்தை முழுமையாகத் தமதாக்கிக்கொண்ட சபாநாயகர் எடுத்த துணிச்சலான முயற்சியால் 13ஆம் திகதி மகிந்த மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உறுப்பினர்களின் குரல்வழியாக நிறைவேற்றம் கண்டது இவர்களுக்குக் கிடைத்த மூன்றாவது தோல்வி.
இதனால் ஏற்பட்ட ஆத்திரமே 14ஆம் திகதி சபாநாகயர்மீது மகிந்த தரப்பினர் குப்பைக்கூடைகள், தண்ணீர்ப் போத்தல்களால் நடத்தப்பட்ட வீச்சு.

இவைகளால் எதுவும் தளராத சபாநாயகர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடுமென அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரணிலுக்கு ஆதரவான சகல கட்சித் தரப்பினரையும் அழைத்துப் பேசிய மைத்திரி, சபாநாயகரையும் தனியாக அழைத்து உரையாடினார்.

மகிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த மைத்திரி அதற்கான விளக்கத்தையும் தெரிவித்தார்.

மகிந்த மீது குற்றச்சாட்டு எதனையும் முன்வைக்காது, ஜனாதிபதி என்ற அதிகார வகையில் தாம் மேற்கொண்ட முடிவுகளை தவறானவை என்று கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றியதை தம்மால் எவ்வாறு அனுமதிக்க முடியுமென்பது அவரது கேள்வி.

இதனால், மகிந்த மீதான புதிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாசக மாற்றங்களுடன் வெள்ளிக்கிழமை மீண்டும் சபைக்கு வரவுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினது பெயர்களும் அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இத்தீர்மானம் நிறைவேற்றி மகிந்த பதவியிழந்தால், ரணிலைப் பிரதமராக்க விரும்பம் தெரிவிக்கும் உறுப்பினர்கள் சத்தியக் கடதாசி மூலம் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாக கூட்டமைப்பின் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதான் இடியப்பச் சிக்கல்.

மகிந்தவைப் பதவியிறக்க ஆதரவு வழங்கிய ஜே.வி.பி.யினர், ரணிலைப் பிரதமராக்க ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க மைத்திரி விரும்பினாராயினும், அதனை சஜித் நிராகரித்து விட்டார்.

மகிந்தவின் அணியை உடைத்துத் தள்ளியதுபோல, ஐக்கிய தேசியக் கட்சியையும் பிளவுபடுத்த மைத்திரி தீட்டிய சதித்திட்டமே சஜித்துக்கான பிரதமர் பதவி என்பது தெரியவந்துள்ளது.

மைத்திரியின் இசகு பிசகான செயற்பாடுகள் எதுவுமே வெற்றி பெறாத நிலையில், நாடாளுமன்றத்தை மீண்டும் டிசம்பர் 7ஆம் திகதி வரை (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் நாள்) கலைக்கும் முடிவுக்கு அவர் செல்வாரானால் எவராலும் தடுக்க முடியாது.

மொத்தத்தில், மோடன் ஒருவன் மலத்தை மிதித்தால் என்ன செய்வானோ அதனையே இப்போது ஓரங்கக் கூத்தாக மைத்திரி செய்துகொண்டிருக்கிறார்.

அடுத்தது என்ன? இதனைப் படித்து முடிக்கையில் சிலவேளை (?) தெரியவந்திருக்கலாம்.


No comments