அப்பம் சாப்பிட்ட அந்த இரவுபோல இன்னொரு அப்ப இரவு வரப்போகிறதா? பனங்காட்டான்

ரணில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தால் தாம் ஜனாதிபதி பதவியைத் துறப்பேன் என்று கூறியதோடு நிற்காமல், வடக்கு கிழக்கு இணைப்பும் சம~;டியும் தமது மரணத்தின் மீதுதான் நடக்கும் என்ற மைத்திரியின் சிங்கக்குரல், இங்கே இன்னுமொரு சிங்கள பௌத்த இனவெறியன் இருக்கிறான் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் 26ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.20மணிக்கு, அருகிருந்தவர்கள் வியத்திருக்க ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டது.
இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரிருந்தே இதற்கான ஒத்திகை பலவேறு கட்டங்களில் பார்க்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் இல்லத்தில் மைத்திரிக்கும் மகிந்தவுக்குமிடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பின்போது அவர்களின் மணமுறிவு இரத்து செய்யப்பட்டு, மீண்டும் மணஉறவு ஏற்படத்தப்பட்ட தகவல் காலம் தாழ்த்தியே வெளியுலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது.

26ம் திகதியன்று பிற்பகல் கூட்டமைப்பின் சம்பந்தன் உட்;பட முக்கியமான சிலர் பங்கேற்ற கூட்டமொன்று ஜனாதிபதியால் நடத்தப்பட்டது. இங்கு அன்றிரவு அரங்கேற்றப்படவுள்ள நாடகம் பற்றி ஜனாதிபதி மூச்சுக்கூட விடவில்லை.

இதனையடுத்து, தம்முடனிருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் மைத்திரி அவரச கூட்டமொன்றை நடத்தினார். தம்முடன் உள்ளவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்போவதையும் இங்கே தெரிவித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

இக்கூட்டம் முடியும் தறுவாயில் ஜனாதிபதி அலுவலகத்து பணியாளர் ஒருவர் ஒரு கடிதத்தை மைத்திரியிடம் கையளித்தார். மகிந்த தலைமையிலான பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை விலத்திக்கொள்வதாக அக்கடிதம் தெரிவித்தது. சமகாலத்தில இதே கடிதம் சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டது.

தமக்கு வந்த கடிதத்தை அங்கிருந்த கட்சிக்காரருக்கு ஜனாதிபதி விபரித்துக்கொண்டிருக்கும் போது, மகிந்தத ராஜபக்~ தமது பரிவாரங்களுடன் அங்கு நுழைந்தார்.

எல்லோரும் அதிசயமாகப் பாரத்திருக்க, பிரதமராக அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் மைத்திரி. இங்கு இவ்வாறு நடைபெற்றக் கொண்டிருக்கும் போது நாட்டின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கையின் காலியில் ஒரு நிகழ்வில் பங்குபற்றிக்கொண்டிருந்தார்.

புதிய பிரதமர் பதவியேற்பைக் கேள்வியுற்ற ரணில் உடனடியாகக் கொழும்பு திரும்பி, ஜனாதிபதியை சந்திக்கச் செல்லாமல் அலரிமாளிகைக்குள் புகுந்துகொண்டார். இதுதான் பிரதமரின் அதிகாரபூர்வு வாசஸ்தலம்.

எக்காரணம் கொண்டும் மகிந்த அலரி மாளிகைக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதே இதற்கான காரணம்.
பிரதமர் பதவியை ரணில் காப்பாற்றிக்கொண்டாரோ இல்லையோ, பிரதமர் வாசஸ்தலத்தை அவர் காப்பாற்றிக்கொண்டார்.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வரை ரணில் அலரி மாளிகையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். இப்போதைக்கு இது ஒன்றே அவருக்கான வெற்றி.

சின்னத்தீவில் ஒரே நேரத்தில் இரண்டு பிரதமர்கள் பதவியில் இருக்கும் அதிசயம் இலங்கையில் மட்டுமேதான்.

அரசியலமைப்பின் பிரகாரம் தாமே சட்டப்படியான பிரதமர் என்கிறார் ரணில். இதனை மறுக்கும் மைத்திரி, ரணிலைத் தாம் பதவி நீக்கிவிட்டதாகவும், மகிந்தவே பிரதமர் என்றும் கூறுகிறார்.
இதன் அடிப்படையில் ரணிலின் பிரதான அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மெய்ப்பாதுகாவலர்கள் அவர்கள் பணியிலிருந்து மைத்திரியால் நீக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தை தம் வசமாக்கிய மகிந்த அங்கிருந்து தம்பணிகளை மேற்கொள்கிறார். இப்போது இரண்டு பிரதமர்களும் இரண்டு இடங்களிலிருந்து பணியாற்றும் அதிசயமிது.

இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகள் மைத்திரி, ரணில், மகிந்த ஆகிய மூவரையும் மாறிமாறி சந்திக்கிறார்கள். எந்த மாற்றத்தையும் காணவில்லை.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எவருக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதோ அவரே பெரும்பான்மையால் பிரதமராகிறார்.

மகிந்தவை பிரதமராக்கும்போது சுதந்திரக் கட்சியில் எல்லாமாகச் சேர்த்து எண்ணிக்கை 95. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் எண்ணிக்கை 105. மிகுதி 25 பேரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 15, ஜே.வியும் சில சொரியல்களுமாக 10. ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிவசக்தி ஆனந்தனும் இந்த சொரியல்களில் ஒன்று.

மகிந்த பலவேறு உறுப்பினர்களை குதிரைப்பேரம் நடத்தி உள்வாங்க வாய்ப்பாக்க நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் திகதிவரைக்கும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

இது ஜனநாயகத்திற்கு முரணானது என்ற குரல் எண்திசைகளிலிருந்தும் வந்தது. ஜனாதிபதியை கண்டித்து ஒரு இலட்சம் பேர் திரண்ட பேரணி ஒன்றையும் ரணில் நடத்தினார்.

மறுபுறத்தில், மந்திரிப்பதவிகள் மலிவு விற்பனைகள் போல் ஆரம்பமாக மந்தைகள்போல பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி - மகிந்த பக்கம் தாவ ஆரம்பித்தனர்.

முதற் கட்டமாக ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேர் தாவி மந்திரிப் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிலைமை இப்படியாக மாறும் என்பதைப் புரிந்துகொண்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய (இவர் ஐக்கிதேசியக்கட்சி உறுப்பினர்) மகிந்த பிரதமர் நியமனம் சட்டபூர்வமானதா என்று சட்டமா அதிபரிடம் கருத்துக்கேட்டார்.

ஜனாதிபதியின் கருமங்களில் கருத்துக்கூறும் அதிகாரம் தமக்குக் கிடையாது எனக்கூறி அவர் தப்பிக்கொண்டார்.

அடுத்த கட்டமாக, மைத்திரியை சந்தித்த சபாநாயகர், சட்டப்படி ரணிலே இப்போதும் பிரதமர் என்று கூறியபோது, நாடாளுமன்ற அமர்வை முன்னைய அறிவிப்பின் பிரகாரம் இந்த மாதம் 5ம் திகதியே நடத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது மகிந்தவை பிரதமர் கதிரையில் அமரவிடச் சம்மதித்தால், ஐந்தாம் திகதி சபையைக் கூட்ட அனுமதிப்பதாக மைத்திரி கூறியதாக ஒரு தகவல். இதனை சபாநாயகர் ஒப்புக்கொண்டதாக இன்னொரு தகவல். ஆனால் மகிந்த அணியினரின் அறிவிப்பு 16ம் திகதிக்கு முன்னர் நாடாளுமற்றம் கூடாது என்பது.
மொத்தம் 125 உறுப்பினர்களையாவது மகிந்த தரப்புக்கு கொள்வனவு செய்ய கால அவகாசம் வேண்டும் என இவர்கள் எண்ணுகிறார்கள்.
கூட்டமைப்பின் சம்பந்தன் மைத்திரி, ரணில், மகிந்த ஆகிய மூவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளார். சில இராஜதந்திரிகளும் சம்பந்தனுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

கூட்டமைப்பினர் எப்போதும் ரணிலின் சுவீகாரக் குழுவாக இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் தற்செயலாக மகிந்த பிரதமராக நீடித்தால் தங்கள் நிலைமை என்னாகும் என்ற அச்சமும், எதிர்க்கட்சித் தலைவர் பற்றிய கவலையும் இவர்களுக்கு ஒரு பக்கத்தில் உண்டு.

ஜே.வி.பி. இவ்விடயத்தில் நடுநிலைமை வகிப்பது என எடுத்த முடிவில் நிலையாக நிற்கிறது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கியநாடுகள் அமைப்பு என்பவை ஜனாதிபதியை சந்தித்து ஆரோக்கியமான பல ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
மகிந்த அணியின் சார்பில் அவரது சகோதரர் கோதபாய இவை அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.

சீனத் தூதுவரும், இந்தியத் தூதுவரும் பிரச்சனைக்குரிய மூன்று தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டனர்.

இந்த இரு நாடுகளும் யார் பக்கம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் தனித்தனியாக ஒரேபக்கம் சாய்ந்து இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை எழுதிக்கொண்டிருக்கையில் (நவம்பர் 1ம் திகதி) மேலும் 13பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

இப்போது எல்லாமாக கட்சிதாவி மகிந்த பக்கம் வந்தவர்கள் 18 பேர். டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வடக்கை சேர்ந்தவர்கள், வடிவேல் சுரேஸ் மலையகத்தமிழர். வன்னியைச் சேர்ந்த காதர் மஸ்தான், கிழக்கைச்சேர்ந்த ஹிஸ்புல்லா ஆகியோரும் புதிய அமைச்சர்கள்.

ரணில் தரப்பிலிருந்து மகிந்த பக்கம் பாய்ந்தவர்களில் முக்கிமானவர் வசந்த் சேனநாயக்க. இலங்கையின் முதற் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகருமான டி.எஸ் சேனநாயக்கவின் பேரனான ருக்மன் சேனநாயக்கவின் புதல்வர் இவர்.

அலரி மாளிகையிலிருந்து தம்மைத் தூக்கி வீசாமல் தடுக்வென நூறுக்கும் அதிகமான பௌத்த பிக்குகளை சுழற்ச்சி முறையில் ரணில் அங்கு தங்கவைத்திருக்கிறார்.

இலங்கை வானொலி, அரச தொலைக்காட்சிகள், லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனம் ஆகியனவற்றை மகிந்த அணி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரி அதிமுக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

ரணில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தால் தாம் ஜனாதிபதி பதவியைத் துறப்பேன் என்று கூறியதோடு நிற்காமல், வடக்கு கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் தமது மரணத்தின் மீதுதான் நடக்கும் என்ற மைத்திரியின் சிங்கக்குரல், இங்கே இன்னுமொரு சிங்கள பௌத்த இனவெறியன் இருக்கிறான் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

மந்திரிப் பதவிக்கான மந்திப் பாய்ச்சல் நாடாளுமன்றம் கூடும் நாள் வரை தொடரும். சிலவேளை மகிந்தவுக்கான ஆதரவு 130யும் தாண்டலாம்.
நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டுவதற்கு மகிந்த தரப்புக்கு தமது ஆட்களை ரணில் அனுப்புவதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மைத்திரிக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க ரணில் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், நம்பமுடியாத ஆனால் நம்பகமான ஒரு தகவல் தெரிவிக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்னர் ஓரிரவு மகிந்தவுடன் அருகிருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் சந்திரிகா - ரணில் அணிக்கு பாய்ந்து சென்ற மைத்திரி ஜனாதிபதியானது நன்கறிந்த கதை.

மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாளும், மறுநாளும் யார் யார் யாருடன் இருந்து அப்பம் சாப்பிடக் காத்திருக்கிறார்களோ?

No comments