கொழும்பு வந்த ஐ.நா தூதுவர் கூட்டமைப்புடன் அவசர பேச்சு

இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து அவசரமாக கொழும்பு வந்துள்ளார். 

இவர் வந்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இதர அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ள இவர், தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்தும் அரசியல் பதற்ற நிலையை தணிப்பது பற்றியும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நேபாளம், ஜப்பான், குரோஷியா, அர்மேனியா உட்பட்ட நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்பதவிகளை வகித்த இவர், அரசியல் நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இலங்கை விடயத்தை நேரடியாகவே கையாள ஐ.நா. பொதுச் செயலாளரால் அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நாவே நேரடியாக தலையிட்டிருப்பதால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகின்றது.

No comments