ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை


ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவிநீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, எம்.எஸ் சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு முரணாகவே நியமித்துள்ளார். இங்கு ஜனாதிபதியே அரசமைப்பை மீறியுள்ளார். இது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, இதனை எதிர்த்தோம். இது தொடர்பில் நாம், ஜனாதிபதியை சந்தித்தபோது எமது தீர்மானத்தை மாற்றக் கோரினார். இல்லாது விட்டால் நடுநிலைமை வகிக்குமாறு கோரினார். நாம் யாருக்கும் ஆதரவானவர்கள் அல்லர் என்றும் இதன்போது தெரிவித்தார்.

அரசமைப்பு, ட்டம் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் காரியங்கள் இடம்பெறவேண்டும் என்பதே எமது நோக்கம். அதனடிப்படையிலேயே, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்ட விடயத்தில் நாம், மூன்றாவது தடவையாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிலிருந்து நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையே ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.

No comments