Header Shelvazug

http://shelvazug.com/

மகிந்த தோற்கடிப்பு: மீண்டும் மைத்திரியிடம் கடிதம்!


பிரதமர் மகிந்தவிற்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதென்பதை சபாநாயகர் இலங்கை ஜனாதிபதிக்கு இன்று மாலை அறிவித்துள்ளார்.

இன்று பெரும் குழப்பத்துக்கு மத்தியில், சபாநாயகர் காவற்துறை பாதுகாப்புடன் சபைக்கு வந்திருந்தார். அப்போது காவற்துறை மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

சபாநாயகர் ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களது கட்டுப்பாட்டில் இருந்ததால், சபாநாயகர் நின்றிருந்தபடி பிறிதொரு ஒலிப்பெருக்கியில் தமது அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிலையியல் கட்டளை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்குமாறு சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கோரினார்.

சுமந்திரன் அதனை முன்வைத்தப் பின்னர், அதனை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோரியதற்கு அமைவாக, பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையின் முதல் வசனத்தை நீக்கிவிட்டு சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரினார்.

அதன்படி குறித்த அவநம்பிக்கை பிரேரணை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைக்க அதனை விஜித்த ஹேரத் வழி மொழிந்தார்.

அதற்கு ஆதரவானவர்களை கோசம் எழுப்புமாறு சபாநாயகர் கோரிய போது, சபையில் பேரிரைச்சல் எழுந்தது. ஆம் என்ற குரல் ஒலித்தது.

அந்த பிரேரணைக்கு எதிரானவர்களை கோசம் எழுப்புமாறு சபாநாயகர் கோரிய போது அமைதி நிலவ ஆரம்பித்தது.

இதன்படி அவநம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று மைத்திரியுடன் நடத்திய சந்திப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்தவிற்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதென்பதை சபாநாயகர் இலங்கை ஜனாதிபதிக்கு மீள அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இதேபோல முதலாம் தடவையும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு மைத்திரியிடம் கையளிக்கப்பட்டபோது மைத்திரி அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.