இலங்கை நாடாளுமன்றம் மைத்திரியால் கலைப்பு?


இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாமென்ற பரபரப்பு பல மட்டங்களிலும் சூடுபிடித்துள்ளது. கொழும்பு அரசியலின்; உச்சக்கட்ட பரபரப்பாக மைத்திரி நாடாளுமன்றை கலைக்கும் திட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் தரப்புக்களுடன் இன்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளதையடுத்து இம்முடிவிற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்றை நள்ளிரவுடன் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.ஆனால் ரணில் விக்கிமசிங்க அவ்வாறு நாடாளுமன்றினை கலைப்பது சாத்தியமில்லையென தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றின் முதலாவது அமர்விலிருந்து 4 ஆண்டுகளும் 6 மாதங்களும் கடந்த பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும். அதனடிப்படையில் நடப்பு நாடாளுமன்றை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஜனாதிபதி கலைக்க முடியும்.

எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி நாடாளுமன்றை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்ற செய்தி தீயாகப் பரவுவதால் கொழும்பு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னரே கலைக்க திட்டமிட்டமிட்டுள்ளார். இந்தச் செயலானது அரசியலமைப்பு மீறலாகும்” என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, இந்நிகழ்வானது இன்று நள்ளிரவே நடைமுறைப்படுத்தக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற கலைப்பு தகவலை உறுதிப்படுத்தியுள்ள மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் மேற்குலக ராஜதந்திரியொருவர் இன்றிரவு எதுவும் நடக்கலாமென எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது  என அரசாங்க தகவல் திணைக்களம் இன்றிரவு தெரிவித்துள்ளது.


No comments