ரணிலே பிரதமர் – சபாநாயகர்?


பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர் – சபாநாயகர் விசேட அறிக்கை
தற்போதைய அரசியல் நிலைமையில் பாராளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே தான் ஏற்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை எனவும் சபாநாயகர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அதன்படி அடுத்தநாள் தொலைபேசியில் அழைத்து பாராளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டுவதற்கு வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியபோதும், அவர் அவ்வாறு செய்யப்படவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கையொப்பமிட்டு தன்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அது தொடர்பில் தான் கவனம் செலுத்துவது தனது பொறுப்பு எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் தான் இதுவரை அமைதியாக இருந்ததாகவும், இனியும் அவ்வாறு செயற்பட முடியாது எனவும் இந்த நேரத்தில் மனசாட்சிக்கு ஏற்ற விதத்தில் தான் செயற்படுவது தனக்கான தேசிய பொறுப்பாகும் என்றும் சபாநாயகர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments