தன்னை பிரதமராக்க மைத்திரிக்கு மகிந்த பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ச விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று ஐ.தே.க. எம்.பியான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

"நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, காட்டாட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்.

அரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றம் இடம்பெறவில்லை. தலைகளுக்கு கோடிகளை வழங்கியே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன்கூட பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். சில பேராசிரியர்களும் இதற்கு துணைபோனார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னிடம் தொலைபேசி ஊடாக பேரம் பேசினார். அதை நான் அம்பலப்படுத்தினேன். ஜனாதிபதியொருவரே அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படுவது பாரதூரமான செயலாகும்.

 ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச பெருமளவு நிதியினை  வழங்கியிருக்கலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது . இது குறித்து தேடிபார்க்க வேண்டும்” என்றும் ரங்கே பண்டார கூறினார்.

No comments