அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் - சம்பந்தன்

“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.”

– இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே, இந்த நாட்டைப் பிரதமர் ஆள வேண்டுமாயின் அதற்கு அங்கீகாரம் பெற வேண்டும். இலஞ்சமும் ஊழலும் ஆளும் சக்தியைத் தீர்மானிக்க முடியாது.

இந்த நாடு இன்றைய நடத்தை காரணமாக நன்மதிப்பை இழந்துவிட்டது. சபாநாயகர் ஆசனம் தாக்கப்பட்டது. தேவையற்ற குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஏன் ஏற்பட்டவை?

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் அரசமைப்பை மீற முடியாது. நாங்கள் அரசமைப்பை மதிப்பதற்கு உரித்துடையவர்கள். இந்தச் சபை கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பிரதமராக செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ நினைக்கின்றார். அதற்கான அங்கீகாரம் கிடைத்தால்தான் செல்லுபடியானதாகும். அதுவே எனது நிலைப்பாடு. இதைவிடுத்து அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் என மஹிந்தவிடம் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

No comments