மைத்திரி விருப்பத்திற்காக ரணிலை மாற்றமுடியாது: ஜெயம்பதி

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள குழுவில் இருந்துதான் ஜனாதிபதி தனது பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, அவரை கொண்டுவாருங்கள், இவரைக் கொண்டு வாருங்கள் எனக் கூற அவருக்கு முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு மீண்டும் அரசாங்கமொன்றை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், ரணில் விக்ரமசிங்கவையோ, கரு ஜயசூரியவையோ பிரதமர் பதவிக்கு இடமளிப்பதில்லையென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே? என அவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிரதமர் யார் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. பெரும்பான்மை பலம் உள்ள குழுவினாலேயே பிரதமர் யார் என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தன்னுடைய கட்சியில் அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் மாத்திரமே அவருக்கு வேண்டியவரை தீர்மானிக்க முடியும்.
இந்தக் காரணங்களினால் தான் நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றோம். நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கு அடுத்த கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும், அவர் அரசியலமைப்பினூடாக செயற்பட வேண்டியுள்ளார். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி தீர்மானிக்கும் ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பது தெளிவாகவுள்ளது. இது இவ்வாறிருக்கையில் ஜனாதிபதிக்கு வேண்டிய பிரகாரம் செயற்பட்டால், அது பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த நாட்டின் எல்லா ஜனாதிபதிகளும் தனது விருப்பு வெறுப்புக்களுக்கேற்பவே செயற்பட்டனர். நாம் கொண்டுவந்த ஜனாதிபதியும் அவ்வாறு செயற்படுவதானது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

No comments