தாயகமெங்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் எழுச்சிக் கோலம்





தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

இன்று மாலை 6.05 மணிக்கு அக வணக்கம்,   மணி ஒலிஎழுப்புதலுடன் ஆரம்பமாகும் மாவீரர் நாள் நிகழ்வு, மாவீரர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றலுடன் நிறைவடையும்.

தமிழ் தாயகத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத – துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் பெரும் எண்ணிக்கையான  மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும், மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வுகளைக் தடுப்பதற்கு சிறிலங்கா காவல்துறை சில இடங்களில் நீதிமன்றத்தை நாடியிருந்தது.  கோப்பாய், சாட்டி மற்றும் மாவடி முன்மாரி ஆகிய இடங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றக் கட்டளைகளை சிறிலங்கா காவல்துறை கோரியிருந்தது.

எனினும், விடுதலைப் புலிகளின் கொடி, சின்னங்கள், பாடல்களைப் பயன்படுத்தாமல், மரணித்தவர்களை நினைவு கூரத் தடையில்லை என்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments