கட்சித்தலைவர்களை சபாநாயகர் அவசர சந்திப்புக்கு அழைப்பு


கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.

இம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை இன்று 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன் என்று சபாநாயகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி வாக்குறுதியளித்திருந்தார். இதனை மறுநாள் 2ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுடனான சந்திப்பில் சபாநாயகர் தெரிவித்திருந்தார். எனினும், இந்த வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி, எதிர்வரும் 14ஆம் திகதிதான் சபை கூடும் என்ற அறிவித்தலை கடந்த 4ஆம் திகதி இரவு விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டிருந்தார்.

இதனை ஆட்சேபித்து மறுநாள் 5ஆம் திகதி காட்டமான அறிக்கையொன்றை சபாநாயகர் வெளியிட்டிருந்தார். அதில், ஜனாதிபதியின் செயல் வெறுக்கத்தக்கது எனவும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஏற்கவே முடியாது எனவும், வாக்குறுதியின் பிரகாரம் நாடாளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், நேற்று தன்னைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவரிடமும் இந்த விவகாரத்தை சபாநாயகர் விலாவாரியாக எடுத்துரைத்திருந்தார்.

எனினும், இன்று 7ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எதனையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.

இந்நிலையிலேயே, கட்சித் தலைவர்களை இன்று மாலை அவசரமாகச் சந்திக்கின்றார் சபாநாயகர். இதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைளை தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆராயவுள்ளார்.

No comments