மைத்திரி கொலைச்சதி - விமல் வீரவன்சவின் மனைவிக்கும் தொடர்பு ?


சிறிலங்கா ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் படுகொலைச் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதான இந்தியருடனான தொடர்பு குறித்து விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவை அடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சதித்திட்டத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவின் வீட்டுக்கு அடிக்கடி சென்றார் என, சிறிலங்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தோமஸ் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

குறித்த இந்தியர் சசி வீரவன்சவின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.

படுகொலைச் சதித் திட்டம் தொடர்பாக நாளிதழ்களில் படித்த பின்னர், அதுபற்றி கலந்துரையாடுவதற்காக விமல் வீரவன்சவின் வீட்டுக்குச் சென்றதாகவும், அவ்வாறு சென்ற போது சசி வீரவன்சவைச் சந்தித்ததாகவும், குறித்த இந்தியர் விசாரணைகளின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே, சசி வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

கடவுச்சீட்டு மோசடி தொடர்பாக சசி வீரவன்சவுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments