தீருவில் தூபி:தவிசாளருக்கு நீதிமன்ற அழைப்பு!


தன்னிச்சையான வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவரது கூத்தினால் மீண்டும் தீருவிலில் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டிருந்த குமரப்பா-புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களது தூபி பணி கேள்விக்குறியாகியுள்ளது.இன்று தன்னிச்சையாக கே.சிவாஜிலிங்கம் முன்னெடுக்கவிருந்த தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பருத்தித்துறை நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

தீருவில் பகுதியில் அமைக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் நினைவுத்தூபி அமைக்கும் பணி தொடர்பிலேயே இந்த கட்டளையை வல்வெட்டித்துறை பொலிசார் பெற்றுள்ளனர்.
''தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி''இயக்க உறுப்பினர்களை நினைவுகூரும் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்க இன்று 12 மணியளவில் நீதிமன்றில் ஆஜரகுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தீருவிலில் அனைத்து இயக்கப்போராளிகளிற்கும் நினைவுதூபி அமைக்கும் தீர்மானமொன்று கே.சிவாஜிலிங்கத்தின் தூண்டுதலில் வல்வெட்டித்துறை நகரசபையில் கொண்டுவரப்பட்டிருந்தது.இதனை கூட்டமைப்பின் உறுப்பினரான சதீஸ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

தீருவில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளது நினைவுதூபி,தளபதி கிட்டுவின் நினைவுதூபி,தேசிய தலைவர் வருகை தந்த அஞ்சலித்த மண் என அடையாளம் உள்ளது.அதில் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களிற்கும் தூபியாவென கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து எழுந்த சர்ச்சைகளையடுத்து சிவாஜிலிங்கம் தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க தன்னிச்சையாக அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றினை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார்.இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது நீதிமன்றிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது

No comments