சீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை!



அரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்டியுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா.

இதனையடுத்தே அநுராதபுரம் சிறைச்சாலையில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென, மாவை சேனாதிராஜா பின்வாங்கியுள்ளார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை, அந்தக் கைதிகளைச் சந்தித்த தாம் தெரிவித்ததாகவும், இது தொடர்பான அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.  

அதன் அடுத்த கட்டமாக, எதிர்வரும் 17ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கு, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும், சட்டமா அதிபருடனும் பேசி முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருந்ததென்றும், ஆகையால், அவர்களிடம் தாங்கள் இந்த விடயத்தைப் பற்றிச் சொன்னதாகவும் கூறினார்.  

ஆனால், அந்தக் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறோ அல்லது அதைத் தொடருமாறோ தாம் வலியுறுத்தவில்லையெனத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, 17ஆம் திகதி சந்திப்பு முடிந்த பின்னர், அதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளுடன், அடுத்த நாள் வந்து பேசுவதாக, கைதிகளிடம் தெரிவித்துவிட்டுத் திரும்பியதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

உண்மையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த கூட்டமைப்பு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம் வரவு செலவு திட்டத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்துவது தொடர்பில் உறுதி மொழி கேட்கப்பட்டிருந்தது.எனினும் அதற்கு தயாராக இல்லாதிருந்த சித்தார்த்தன் அது பற்றிய கூட்டத்திற்கு வரவில்லையெனவும் பங்காளிகட்சிகளுடன் பேசி முடிவை எடுக்கவும் அழுத்தங்களை பிரயோகிக்கவும் தயாராக இருப்பதாகவும் சாதுரியமாக நழுவியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி அறியாது சிறைக்கு சென்றிருந்த மாவையிடம் மாலை வீழ்ந்திருந்ததுடன் கூட்டமைப்பினை சிக்கலினுள்ளும் மாட்டிவிட்டதாக சுமந்திரன் சீறிப்பாய்ந்துள்ளார்.

இதனையடுத்தே மாவை தற்போது தப்பித்துக்கொள்ளும் வகையில்  உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென இப்போது பல்டியடித்துள்ளார்.

No comments