சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்


நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“சிறிலங்கா அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை  அங்கீகாரித்து- சட்டங்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு உங்களிடம் கோருகிறேன்.

அதன் சட்டபூர்வமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த இது உதவும்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முற்பகல் அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை, நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயற்படுமாறு சிறிலங்கா அதிபரிடம் அவர் கோரியிருந்தார்.

அதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவும், நேற்று தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனைத் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது, கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எனினும், எந்தத் தரப்புக்கும் ஆதரவு அளிப்பதாக தாம் வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments