வெள்ளைவான் கொலையாளியான கடற்படைத் தளபதி கைதாவாரா ?


5 மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய புலனாய்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான சாட்சிகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கோவை மேலதிக ஆலோசனை பெறுவதற்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புலனாய்வுத் துறையினர் முன்னெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க அத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விசாரணைக் கோவையில் பிரபல சாட்சிகள் வெளிபடுத்தப்ப்ட்டுள்ளதை அவதானித்துள்ள சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், அச்சாட்சிகளின் பிரகாரம் ஏனைய விசாரணைகளையும் முன்னெடுத்து நிறைவு செய்ய கடந்தவாரம் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே மேலும் சிலரைக் கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சாட்சிகள் வெளிபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் புலனாய்வுத்துறையினர் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments