இடைக்கால அரசாங்கம் அமைக்க திட்டம்


அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப் போவதாகச் சூளுரைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணி, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியோடு, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராகக் கொண்டதாக இவ்வரசாங்கம் அமையுமென, அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, அவ்வணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்கவே, இக்கருத்தை வெளியிட்டார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட, நாட்டிலுள்ள அனைத்து முற்போக்குப் பிரிவுகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினரும், ஐ.தே.கவின் கொள்கைகள் தொடர்பாக ஏமாற்றமும் திருப்தியின்மையும் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைவரும், புதிய இடைக்கால அரசாங்கத்துக்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

No comments