உண்மையினை பெரும்பான்மையின மக்கள் அறியவேண்டும்

கடந்த 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை பெரும்பான்மை இன மக்கள் அறிந்து செயற்படும்போதே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடைமுறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வ மத செயற்பாடுகளின் ஒரு பகுதியான பல்வேறுபட்ட மதம் மற்றும் இனத்தை பிரதிநித்துவப்படுத்தி, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (வெள்ளி கிழமை) வட்டக்கண்டல் பாடசாலை பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

  
அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டும் உடைக்கப்படும் வருகின்றது.

இவைகளுக்கு காரணம், மத தலைவர்களிடமும், மக்களிடமும் ஒற்றுமை இல்லாமையே ஆகும். ஆகையால் இனியாவது ஒன்றுமையுடன் இணைந்து அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்தும் எண்ணத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும்.

இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் பெரும்பான்மையினர் சிந்திந்து செயலாற்ற வேண்டும். அப்போதுதான் நிரந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்” என அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

No comments