வடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்!


இலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்வரும் திங்கட் கிழமை சகல ஆளுநர்களையும் இ பிரதம செயலாளர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அழைத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் 22ம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் 25ம் திகதி முடிவுக்கு வருகின்ற நிலையில் அரசு தனது ஆட்சியை ஆளுநர் ஊடாக முன்னெடுக்க மும்முரம் காட்டிவருகின்றது.

முன்னதாக இவ்வாண்டின் நடுப்பகுதியிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தனது புகைப்படங்களை அச்சிட்டு வடமாகாண அலுவலகங்களில் தொங்கவிடப்பணித்துள்ளார்.எனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் ஆட்சிகாலத்தில் ஆளுநரது புகைப்படத்தை தொங்கவிட பெரும்பாலான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் 25ம் திகதியுடன் ஆளுநரது படங்களை தொங்கவிட ஆளுநர் அலுவலகம் தற்போது பணிப்புரைகளை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

வடமாகாணசபை தேர்தலை பிற்போடுவதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு ஆளுநர் ஆட்சியை தொடர அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே ஆளுநரது புலம்பெயர் பயணம் அமைந்திருப்பதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவுறுகின்ற நிலையில் பிரதம செயலாளர் உள்ளிட்டவர்களை அவசரமாக கொழும்புக்கு ஜனாதிபதி செயலகம் அழைத்துள்ளது.

No comments