ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்ய நடவடிக்கை


கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை அடுத்தவாரம் கைது செய்யவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இந்த வழக்கு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது,  வழக்கின் சந்தேக நபரான லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சியை, மறைந்திருப்பதற்கு உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது  குற்றம்சாட்டுவதற்கு போதிய சான்றுகள் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் தெரிவித்தனர்.

இதன்போது, இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் 10 ஆவது சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல், மறைந்திருப்பதற்கு உதவிய அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், வழக்குத்தொடுனரான சட்டவாளர் அசல செனிவிரத்ன குற்றம்சாட்டினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக, நீதிமன்றிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு மாதத்துக்கு முன்னரே உறுதியளித்தனர். எனினும் அதனைச் செய்யவில்லை.

அனைத்துக் குடிமக்களுக்கும் சட்டம் ஒரே விதமாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, அடுத்த வாரம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்தனர்.

No comments