புத்தளத்திலிருந்து வந்து வழிப்பறி - யாழில் இருவர் கைது


புத்தளத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் குடு போதைப்பொருள் பாவனையால் நண்பர்களாகினர். குடு பாவனைக்காக வழிப்பறியில் ஈடுப்பட்டனர் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் அண்மைய நாள்களில் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றன. வீதியால் சென்ற பெண்களிடம் நகைகள் மற்றும் கைப்பைகள் பறிக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரை   கைது செய்தனர்.

அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை சந்தேகநபர்கள் நகைக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர். அவை உருக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அதனுடன் பெண் ஒருவரின் கைப்பையும் சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்டது. அதற்குள்ளிலிருந்து வெளிநாட்டு நாணயத்தாளும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments