டிசெம்பர் 31 காலக்கெடு சாத்தியமில்லை!

பலாலி படைத்தளம் மற்றும் விமான நிலைய பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென யாழ்.மாவட்ட இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது. 

படைகளின் வசமுள்ள மக்களின் காணிகளை, டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கமைய, யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு அவர்கள் பணம் தேவையென்று கோரியிருப்பதால், அதனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தை தாமும் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தனியார் காணி, அரச காணிகளில் விடுவிக்கப்பட்டவை எவை இன்னமும் விடுவிக்கப்பட இருப்பவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

“ஒவ்வொரு பிரதேச அலுவலர் பிரிவிலும் இரானுவம், கடற்படை, பொலிஸாரிடம் இருக்கும் நிலங்களளை வகையாகப் பிரித்து நாங்கள் பார்த்தோம்.

“அதில் கடந்த தடவை இருந்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்த போது, இராணுவத்தினராலே பல காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கின்றோம்.

“இங்கு இராணுவத்தினர் ஏராளமான காணிகளை விடுவித்திருந்தாலும், இன்னமும் விடுவிக்கப்படுவதற்கு பல ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அதிலே பல இடங்களிலே பல காணிகளை தாங்கள் விடுவிப்பதற்கு முடிவெடுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

“ஆனால், அதனை விடுவிப்பதில் இரண்டு விடயங்களைச் சொன்னார்கள். அதாவது, அங்கே இருக்கிற இராணுவத்தினரை இன்னொரு இடத்துக்கு மாற்றுவதற்கு மாற்றீடான காணிகள் எங்கே என்பதனைக் கண்டுபிடிப்பதும், தங்களுடைய அந்த இடமாற்றத்துக்குத் தேவையான பணமும் புதிய கட்டடங்களுக்குத் தேவையான பணமும் அரசாங்கம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தேவை தொடர்பிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

“ஆகவே, இந்த இரண்டும் சரி வந்தால் தாங்கள் இதிலே கூடுதலான பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு, ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாகச்;சொல்லியிருக்கின்றார்களெனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டு பலாலி இராணுவத்தலைமையகம் படைத்தரப்பு விடுவிக்க கூடிய காணிகளை விடுவித்துவிட்டதாகவும் இனிவருங்காலங்களில் விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் முடிவெதுவும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளது.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் அரசியல்வாதிகளின் விருப்பப்படியாக நடைமுறைப்படுத்த முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.

No comments