கிடைத்தவையெல்லாம் கிடைத்தவை தான்!

வடமாகாணசபையின் ஆயுட்காலம் முடிவுற்றிருந்த நாளன்று அவைத்தலைவர் அவசர அவசரமாக அதிகாரிகளிற்கு மாகாணசபை தீர்மானமொன்றை அமுல்படுத்த கடிதம் எழுதியுள்ளாராம்.அதற்காக அக்கடிதம் மக்களின் நலன்களுடன் தொடர்புபட்டதென நீங்கள் விபரீதமாக முடிவெடுத்தால் அது கவலைக்குரியதே.

அவைத்தலைவர் அவசர அவசரமாக எழுதிய கடிதம் உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டுமென்பதேயாகும்.

உறுப்பினர்கள் மக்களிற்கு சேவையாற்ற ஏதுவாக அலுவலகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களிற்கு அவ்வலுவகங்களிற்கு கணணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்வனவு செய்ய சுமார் 16மில்லியன் செலவு செய்யப்பட்டிருந்தது.

2015 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் அவ்வாறு கொள்வனவு செய்து வழங்கிய பொருட்களையே பொருட்பதிவிலிருந்து நீக்கிவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனிடையே மத்திய அரசின் நிதி ஆலோசனைகளை மாகாணசபை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டியதில்லையென சுமந்திரன் ஆலோசனை வழங்கியிருப்பதையும் அவைத்தலைவர் சுட்டிக்காட்டியிருப்பதாக கணக்காய்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. 

2015-16ம் ஆண்டுகளில் இத்தகைய வசதிகள் வழங்கப்பட்ட போதிலும் பின்னர் மாதாந்தம் மக்கள் சந்திப்புக்களிற்கான அலுவலகங்களை வைத்திருக்கவென மாதம் தோறும் 50ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வழங்கப்பட்ட சொத்துகளையும் மீள அறவிடாமை தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் அதிகாரிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments