மன்னார் மனிதப் புதைகுழி - 30 வீத அகழ்வில் 148 எலும்புக்கூடுகள் மீட்பு


மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“இதுவரையில் புதைகுழியில் 30 வீதமான பகுதியே எமது குழுவினரால் அகழப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகளில் அகழ்வுப் பணிளை முடிக்க இன்னும் ஒரு மாதமோ, அதற்கு அதிகமான காலமோ தேவைப்படலாம்.

புதைகுழியின் விளிம்புகளை பார்க்கும் போது இன்னும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

12 மீற்றர் நீளமும், 8 மீற்றர் அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை.

நானும், சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்சவும் எதிர்கொண்ட சில பிரச்சினைகளால், ஒருவாரகாலம் இடைநிறுத்தி வைக்கப்பட்ட அகழிவுப் பணி மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு நிதிப் பிரச்சினை உள்ளது. இதற்கு நிதி உதவி வழங்குமாறு, சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளோம்.

வெளிநாட்டில் ஆய்வுச் சோதனைகளை மேற்கொள்வதற்கு நிதி வழங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் வாய்மொழியாக கூறியுள்ளது. ஆனால் இதுபற்றிய முன்னேற்றங்கள் குறித்து எமக்கு இன்னமும் ஏதும் தெரியப்படுத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகளின் மாதிரிகளை வெளிநாட்டுக்கு சோதனைக்காக அனுப்புவதற்கு முன்னர் நீதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

எலும்புக்கூடுகளின் மாதிரியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள இரண்டு மணிநேரம் போதும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments