இடைக்கால அரசு திட்டத்தால் மகிந்த அணிக்குள் பிளவு

இடைக்கால மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு, கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் நடந்தது.

இதில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும், கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, கிராமப் புறங்களில் வாழும் மக்கள் மத்தியில் சிறிலங்கா ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், கூறினார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவ்வாறு இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் தான் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வேன் என்று தெரிவித்தார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே,  இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால், குமார வெல்கம எதிர்க்கட்சி வரிசையில் அமரக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

கட்சியைச் சீர்குலைத்த மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இடைக்கால அரசை அமைக்கும் யோசனையை வரவேற்றுக் கருத்து வெளியிட்ட போதும், ரொமேஷ் பத்திரன , ஷெகான் சேனசிங்க, ரொஷான் ரணசிங்க  ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கூட்டு எதிரணியில் உள்ள அனைவரும் இணங்கினால் மாத்திரமே, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியில் உள்ளவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

No comments