யாழ் போதான வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல் நாளை


இந்தியப் படைகளால் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (21) முற்பகல் 10.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்வுள்ளது.

அமைதிப் படை என்ற போர்வையில் தமிழர் தாயத்தில் கால்பதித்த இந்தியப் படையினர் சிறிலங்கா படைகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது கொடூரங்களைப் புரிந்தனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கினர்.

தமிழ் இளைஞர், யுவதிகளைச் சுட்டுக்கொன்றனர். சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் தூக்கி வீசிப் படுகொலை செய்தது இந்தியப் படை.

தமிழர் தாயகத்தில் தனது கோர முகத்தைக் காட்டிக்கொண்டிருந்த இந்தியப் படையினர், கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் படுகொலை செய்தனர்.

இதில் மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 47 நோயாளர்கள், அவர்களின் உறவினர்கள் என 68 பேர் கொல்லப்பட்டனர்.

ஈழத்தில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் சர்வதே ரீதியாக அப்படைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

அமைதியைத் தோற்றுவிப்பதற்கு என தாயகத்திற்குச் சென்ற இந்தியப் படைகள் அமைதிக் கரம் உயர்த்தியவர்களைத் தமது துப்பாக்கிகளால் சுட்டுக்கொன்ற தினத்தை தமிழ் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள் என்பதை தொடரும் நினைவேந்தல்கள் உறுதிசெய்கின்றன.

No comments