Header Shelvazug

http://shelvazug.com/

பௌத்த விகாரைக்கு அனுமதி:சிவனிற்கு இல்லையாம்?


காரைநகரில் அமைக்கப்படவிருந்த கூட்டமைப்பு ஆதரவாளரின் நட்சத்திரவிடுதி விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரவைத்திய அதிகாரியும் சைவநெறி செயற்பாட்டாளருமான ப.நந்தகுமார் தகாரைநகர் நுழைவாயிலில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. 2016 மார்கழி திருவாதிரையின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. நூற்றாண்டு கண்ட காரைநகர் சைவ மகா சபையின் நூற்றாண்டுச் செயற்திட்டமாக அரசிடம் இருந்து 99 வருடக் குத்தகைக்கு நிலம் பெற்று சிவன் சிலை அமைக்கும் பூர்வாங்கப் பணிகள் 2 வருடங்களிற்கு முன்னரே தொடங்கின.

இருப்பினும் பிரதேச சபையின் ஏனைய ஆலயங்களின் மதசார் கட்டுமானங்களில் பின்பற்றப்படாத தேவைப்பாடுகளின் கோரல் காரணமாக சிறிது காலம் வேலைகள் தடைப்பட்டு இருந்தன.

தற்போது மழைக்கு முன்னதாக அடித்தள வேலைகளை முடிப்பதற்கு முயன்ற போது சபையின் அனுமதியின்றி தன்னிச்சையாக உப தவிசாளர்.க . பாலச்சந்திரன்; வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று பணியாட்களையும் எமது உறுப்பினர் களையும் வேலைக்கு கைவிடுமாறு மிரட்டினார்.

அதன் பின்னர வேலை நடைபெறும் இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பொலிசார் உப தவிசாளர் பாலச்சந்திரனின் முறைப்பாடு செய்து இருப்பதால் பணிகளை இடை நிறுத்துமாறு கோரினர்.

இதுவரை காரைநகரில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு வணக்கத்தல கட்டுமானத்திற்கும் பிரதேச சபை தடை விதித்து இடையூறு செய்ததில்லை. எந்தவொரு பிரதேச சபை உறுப்பினரும் சபையின் அனுமதியின்றி தன்னிச்சையாக பிரதேச சபைச் செயலாளரின் அதிகாரத்தை கையிலெடுத்து முறைப்பாடு செய்ததுமில்லை.

இங்கு விடயம் என்னவெனில் மிகவும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கும் மதுவுடன் கூடிய நன்னீர் தேங்கி நிற்கும் பிரதேசத்தில் பாரிய மல மற்றும் கழிவுகளை உரிய முறையில் அகற்ற சாத்தியமற்ற நட்சத்திர விடுதி சம்பந்தப்பட்டவரின் மிக நெருங்கிய உறவினர் என்பதாலாகும். எக்காரணம் எவ்விடர் வரினும் சிவ பூமியின் பாரம்பரியத்தை காப்போம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பதிலளித்துள்ள கூட்டமைப்பு சார்பு பிரதேசசபை உப தலைவர் பாலச்சந்திரன் சைவமகாசபை சிவன் சிலை அமைப்பதற்காக இதுவரை பிரதேச சபையிடம் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பித்தால் விரைந்து பரிசீலனை செய்து அனுமதி வழங்க தயார். கடலோர பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடமும் அனுமதி பெறவேண்டிய தேவையுள்ளது. அத்துடன் காணி உரிமத்தினையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவை எதுவும் பெறாமல் அனுமதி வழங்குமிடத்து பொறுப்புக்கூறும் பொறுப்பு பிரதேசசபை தவிசாளருக்கே உள்ளது. கல்யாணமண்டபம்,சுப்பர் மார்க்கட், தங்கு மிட விடுதி உள்ளடக்கிய மத்திய அரசின் அனுமதி, கடலோர பாதுகாப்பு திணைக்கள அனுமதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் பிரதேச சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் 45 நாட்களுக்கு மேலாக சுகாதார வைத்திய அதிகாரியின் அவரது அதிகாரத்திற்கு மேற்பட்ட கோரிக்கையால் தாமதப்பட்டதன் விளைவாக பிரதேச சபை தவிசாளருக்கு உள்ள விசேட அதிகாரங்களின் மூலம் கட்டிட அனுமதி வழங்கப்பட்டது. அங்கே மதுபானம் விற்பதற்கோ,அல்லது விபச்சார விடுதி நடாத்துவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. காரைநகருக்கு பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்படும் இக்கட்டிடம் காரைநகருக்கு மேலும் அழகு சேர்க்கும். அத்துடன் பலருக்கு நேரடி மறைமுக வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். சிவபூமி என்று பெயரளவில் சொல்கின்றோம் இங்கு கடற்படையினர் மதுபானத்துடன் கூடிய ஹோட்டலை இயக்கவில்லையா? இது சுகாதார வைத்திய அதிகாரி கண்ணுக்கு தெரியவில்லையா? தயவு செய்து காரைநகர் மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய இத்திட்டங்களை இல்லாமல் ஒழித்து காரைநகரில் வறுமையில் வாழும் நெஞ்சங்களின் சாபங்களிற்கு ஆளாகாதீர்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என தெரிவித்துள்ளார்.

No comments