ஒன்பது வாக்குக் கட்சி - ஈபிடிபிக்கு புதிய பெயர்


ஈழமக்கள் ஜனநாயக் கட்சியை ஒன்பது வாக்குக் கட்சி எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் 1990 களின் ஆரம்பத்தில் ஒன்பது வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட  உறுப்பினர்களை வைத்தே  தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம்  வெற்றிகரமாக மேற்கொண்டது என்றும் இன்று அவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இன்று நல்லூரில் நடைபெற்ற தனது புதிய அரசியல் நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
அவர் தனது உரையில்,

“ஜனநாயக தேர்தல்களில் பங்குபற்றி  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் , ராஜதந்திர மற்றும் சர்வதேச உறவு செயற்பாடுகளில் ஈடுபட்டு  எமது மக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவதும் ஆதரவைப் பெறுவதுமே இந்த அரசியல் ராஜதந்திர போராட்டத்தின் அடிப்படை.

இதனை உணர்ந்துதான் 1990 களின் ஆரம்பத்தில்  வெறும் ஒன்பது வாக்குகளுடன் ஒரு தமிழ் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வகையில் தேர்தலை நடத்திவிட்டு அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம்  வெற்றிகரமாக மேற்கொண்டது.  அதே “ஒன்பது வாக்கு” கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினர்தான் நாம் எதுவுமே செய்யவில்லை என்று இன்று கூச்சல் போடுகின்றார்.


ஜனநாயக தேர்தல்கள்  மூலமாக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்துதான்  கசப்புணர்வுகள் பகைமைகளை மறந்து  தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில்  பழம்பெருந் தமிழ் அரசியல் கட்சிகளையும் முன்னாள்  ஆயுத போராட்ட அமைப்புக்களையும்  ஒன்றிணைத்து  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாடுகளை கைவிட்டு தடம் புரண்டு “ஒன்பது வாக்குக் கட்சி”யுடன் கைகோர்த்து நிற்கின்றது. பொருளாதார அபிவிருத்தி ஏன் செய்யவில்லை என்று துணிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை அறியாமல் அரற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.” - என்றும் குறிப்பிட்டார்.

No comments