ஏக்கியராஜ்ய-எக்சத் ரட்ட:சுமந்திரனிற்கு வகுப்பெடுக்கும் டக்ளஸ்!


“ஏக்கிய ராஜ்ய  – எக்சத் ரட்ட” என்ற சொற்களில் குழப்பங்கள் கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்படுவதாக டக்ளஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஒருமித்த நாடு என்றால் சிங்களத்தில் எக்சத் ரட்ட என்றே இருத்தல் வேண்டும். ஆனால் முன்மொழியப்படும் புதிய அரசியல் யாப்பில் சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றே உள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பானது ஒற்றையாட்சி என்பதே ஆகும்.

ஆக்கப்படும் சட்டங்களில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இடையில் ஏதேனும் மாறுபாடு இருப்பின் சிங்கள மொழியே மேலோங்கி இருக்கும் என்பது அடிக்குறிப்பாக உள்ளது. இதையே நான் புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவிலே ஆட்சேபித்திருந்தேன். இதை அக்குழுவிலிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் உணர்ந்துகொண்டதாலேயே அந்த அமர்வு இம்மாதம் 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளனயெனவும் டக்ளஸ் மீ;ண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தென்னிலங்கைக்கு சமஷ்டி கட்சி என்றும் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி என்றும் தன்னை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இரட்டை வேடத்தை நாம் அம்பலப்படுத்தியதன் பின்னரே சில வருடங்களின் முன்பு மூன்று மொழிகளிலும் அகில இலங்கை தமிழரசுக் கட்சி என்று அது பாவித்து வருகின்றது.

இதே போன்ற ஒரு இரட்டை வேட நிலையில் தான் ஏக்கிய ராஜ்ய  என்பது ஒருமித்த நாடு தான் என்று பிழையான விளக்கத்தை தமிழரசுக்கட்சியினர் வழங்குகின்றனர். புதிய அரசியலைமைப்பு அல்லது அரசியல் சாசன திருத்தங்கள் என்பன  எப்போதாவது தான் இடம்பெறும். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியலமைப்பு சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே சரியான மொழிபெயர்ப்பை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும், என்று விடாப்பிடியாக போராடி வருகின்றோமென சுமந்திரனிற்கு டக்ளஸ் பதிலடி வழங்கியுள்ளார்.

No comments