மீண்டும் கதிரைகள் வேண்டுமென்கிறார் டக்ளஸ்!

எமக்கு போதுமான அளவு அரசியல் பலம்கிடைக்கப்பெற்றிருக்குமேயானால் அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றினை இலகுவாக செய்திருக்க முடியுமென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்துடன் வடமாகாண சபை தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் மாகாண சபை முறைக்கு ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று தாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான  சந்திப்பில் கருத்து  வெளியிட்ட அவர் அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது. அந்தவகையில்தான் கடந்த காலங்களிலிருந்து நாம் எமது கட்சியின் நிலைப்பாடாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.


ஆரம்ப காலங்களில் இருந்து மாகாண சபைக்கு ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதற்கான வழிமுறைகள் பல தமிழ் தலைமைகளுக்கு கிடைக்கப்பெற்றும் அதை அவர்கள் சரியாக கையாளாகாமையால் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேரிட்டது.

இந்நிலையில் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இங்குள்ள சகல தமிழ் அரசியல் தரப்பினரும் ஒன்று சேரும் பட்சத்தில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.

கடந்த காலங்களில் தமக்கு வாக்களித்திருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுத் தருவோம் என்று கூறியவர்கள் இன்று எவற்றிற்கும் முழுமையாக தீர்வுகளை காணமுடியாதிருக்கின்றார்கள்.
குறிப்பாக சிறைச்சாலைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்த மட்டடில் தமிழரசுக் கட்சியிடம் போதுமான அரசியல் பலம் இருந்தும் அதனை செயற்படுத்தாதுள்ளார்கள்.

ஆனால் எமக்கு போதுமான அளவு அரசியல் பலம் கிடைக்கப்பெற்றிருக்குமேயானால் நாம் அவற்றை இலகுவாக செய்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா மாகாண சபை தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அத்துடன் மாகாண சபை முறைக்கு ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று தாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதையும் இதன் போது தெரிவித்திருந்தார்.

No comments