குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: மூவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கின் குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் அப்பாவி பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவி உட்பட  மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு நித்திரையிலிருந்த இவர்கள் மீது அப்பகுதியினை சேர்ந்த ஒருவர் கூரிய வாளால் வெட்டியுள்ளார்.அதில் பா.ஜெயசிறி(வயது 66) எனும் அப்பாவி முதியவர் மரணமடைந்துள்ளார்.அவரது மனைவியான ஜெ.நிர்மலாதேவி(வயது 53) படுகாயமடைந்துள்ளார்.

வீட்டின் வெளியே நித்திரையிலிருந்தவர்களை குறித்த நபர் படுக்கையில் வைத்து வெட்டியுள்ளார்.

அதேவேளை குறித்த நபர் அருகாகவுள்ள மற்றொரு வீட்டினுள் புகுந்து நடத்திய வாள் வெட்டினில் எஸ்.சித்திரவடிவேல் (வயது 56) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனிடையே குறித்த கொலைகளை மேற்கொண்ட நபர் ஊர்பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருளிற்கு அடிமையாகி கொலைகளை செய்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களிற்கும் கொலையாளிக்குமிடையே எந்தவித முற்பகையோ உறவுமுறையோ இருந்திருக்கவில்லையென தெரியவருகின்றது.

வடமராட்சி கிழக்கில்  வகைதொகையற்று போதைபொருள் பயன்பாடு அதிகரித்திருக்கின்ற நிலையில் அதற்கு அடிமையாகியே இக்கொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாமென ஆரம்ப கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments