திருச்சி, தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் பெரியார் சிலைகள் அவமதிப்பு!

தமிழகத்தில் பெரியார் சிலைகள் மீண்டும் மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது.


சமீப காலமாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் மர்ம நபர்களால் அவமதிப்பது அடுத்தடுத்து நடந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்த நாள். அன்றைய நாளில்,  சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள, பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில்  உள்ள பெரியார் சிலை இன்று காலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணியால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சிலையை அப்பகுதியில் உள்ள பெரியார் தொண்டர்கள் பராமரித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் பெரியார் சிலை அருகே இருக்கும் கரும்பலகையில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் தினமும் எழுதுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று காலை 5 மணி அளவில் விழிப்பு உணர்வு வாசகம் எழுதுவதற்காக சிலை அருகே சென்றபோது, பெரியாரின் கைத்தடி உடைந்து கீழே கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் பதறிப் போனார்கள். இதையடுத்து, இது குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் மீது வழக்கு பதிவு செய்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவராப்பட்டு என்கிற இடத்திலும் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து திராவிடர் கழகத்தினர் புகார் கொடுத்ததுடன், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளை மீண்டும் அவமதிப்பது மீண்டும் தொடங்கியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

No comments