யாழில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் எவ்வளவு?

யாழ்.மாவட்டத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் குழப்பமேற்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக செயலாளரும் காணி விவகாரங்களை கையாள்பவருமான சுப்பிரமணியம் முரளீதரன், சுமார் நான்காயிரத்தி ஐநூறு ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக்கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இன்னமும் ஐயாயிரத்தி இருநூற்றி ஐம்பது ஏக்கர் தனியார் காணிகள் இலங்கைப்படையிடம் உள்ளதாக யாழ். மாவட்ட அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏலவே கூறியிருந்தார்.அத்துடன் படையினர் வசமுள்ள அரச காணிகள் விபரத்தினை அவர் உள்ளடக்கியிருக்கவில்லை.

இந்த நிலையில், யாழ் மாவட்ட செலயகத்தில் முன்வைக்கப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்களது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் இன்னமும் 37 ஆயிரம் வீ;டுகள் தேவை என்றும் சுப்பிரமணியம் முரளீதரன் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த யூன் மாதம் ஐந்தாம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 14 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியிருந்தார். இவ்வாறு காணிகள் இல்லாதவர்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பளைப் பிரதேசத்தில் உள்ள காணிகளை வழங்க முடியும் என அவர் ஆலோசனை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

ஆயினும் யாழில் அரச காணிகளை படையினருக்கு வழங்கியவாறும் அது தொடர்பில் வாயே திறக்காதிருந்தவாறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருந்துவருவதாகவும் இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்களது அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

#Jaffna #Sri Lankan #Tamil

No comments