தொண்டைமனாறு திட்டத்திற்கு வரவேற்பு!


குடாநாட்டு மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்படவுள்ள தொண்டைமனாறு நீர்த்தேக்க திட்டத்திற்கு பலதரப்புக்களும் தமது ஆதரவை தெரிவித்துவருகின்றன.

இந்த திட்டத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடன் செயற்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இதற்கென சுமார் 200 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு, வடமராட்சி வடக்கு, தொண்டைமானாறு உவர்நீரேரிகளை ஒன்றிணைத்து தொண்டைமானாற்றில் ஒரு நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம் வீணாக கடலுடன்; மழை நீரை சேமிக்கமுடியும். சேமிக்கும் நீரை இலகுவில் சுத்திகரித்து குடிநீராக மாற்றமுடியுமென சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது கடல்நீரை நன்னீராக மாற்றும் பொறிமுறை போன்றதே. ஆனால் உவர் நீரின் அளவு மிகவும் குறைவு என்பதால் இலகுவானதும் மலிவானதுமாக இருக்கும். மேலும் வடமராட்சி, வடமராட்சி, தொண்டைமனாறு பிரதேச நிலத்தடி நீரும் மேலும் வளமானதாக மாறும்.நீர் மட்டம் கூடும். உப்புக்கிணறுகள் படிப்படியாய் நன்னீராக மாறலாமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணியின் தெற்குப்பகுதில் ஆரம்பிக்கும் வடமராட்சிக்கிழக்கு உவர் நீர் களப்பு நீரேரி நாகர்கோவில் ஊடாக வல்லை வெளி கடந்து தொண்டைமானாற்றில் கடலுடன் கலக்கிறது.

சிலநேரம் கோடைகாலத்தில் இது வற்றிப்போனாலும் சரியான தடுப்பணைகள், பராமரிப்பு இருந்தால் வருடம் முழுக்க இதில் நீர் இருக்கும்.
ஆறுமுகம் திட்டம் என்பது இந்த வடமராட்சி உப்பள நீரேரியை ஆனையிறவு நீரேரியுடன் இணைப்பது. அதுவே யாழ்ப்பாண ஆற்றுத்திட்டம்.

அண்மையில் நடந்த யாழ்ப்பாணத்தில் நடந்த நீரியல் கொள்கை வகுப்பு மாநாட்டில் பலராலும் முன்வைக்கப்பட்ட மிகச்சிறந்த முன்மொழிவு இதுதான்.

லண்டனில் இருந்து வந்த திரு. குணசேகரராசா அவர்களினால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான அங்கீகாரத்தையே அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்துக்கும் தாளையடியில் அமைக்க முயற்சிசெய்யப்படும் கடல்நீர் நன்னீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.

ஆனால் நேற்று வெளியான தமிழரசு கட்சியின் பத்திரிகைச்செய்தி இரண்டையும் குழப்பியடித்துள்ளது.

தாளையடியில் அமைக்க முயற்சி செய்யப்படும் கடல் நீர் நன்னீர் சுத்திகரிப்பு திட்டத்தை அந்த மக்கள் எதிர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் ஆயிரம் உண்டு. குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்துக்கு வடமராட்சிக்கிழக்கு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற ஒரு விம்பத்தை ஒரு சில முட்டாள்கள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.
உண்மையில் நடப்பது என்ன?

வடமராட்சி கிழக்கில் இருந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பவுசர்களில் அடைத்து குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அதை இந்த மக்கள் தடுக்கவில்லை. வல்லிபுரக்கோயிலின் தெற்கே; நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்பட்டு வடமராட்சி முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. 
இதைக்கூட அந்த மக்கள் எதிர்க்கவில்லை.

அந்த மக்கள் எதிர்ப்பது தாளையடியில் மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைக்கப்பட இருக்கும் கடல்நீர் நன்னீர் சுத்திகரிப்பு திட்டத்தை மட்டுமே!
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு தனியார் முதலாளி. 

குடாநாட்டில் மீன்வளம் எஞ்சியிருக்கும் ஒரே பிரதேசம் வடமராட்சிக்கிழக்கு கற்கோவளம் தொடக்கம் சுண்டிக்குளம் வரையுமேயாகும்.

அந்த மீன்வளத்தை குறிவைத்து ஏற்கனவே தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமித்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறார்கள்.

அடிக்கு மேல் அடியாய் இந்த கடல்நீர் நன்னீர் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்த மக்களின் வாழ்வாதாரத்து யார் பதில் சொல்வது?

தாளையடியில் அமையவிருக்கும் கடல்நீர் நன்னீர் திட்டத்துக்கு மாற்றீடாக இந்த வடமராட்சி ஆற்றுத்திட்டம் என்று சொல்லப்படும் தொண்டைமானாறு நீரேந்து திட்டத்தை இந்த மக்கள் மிக நீண்டகாலமாக முன்மொழிந்துள்ளார்கள்.

எப்படியோ அந்த மக்கள் குடாநாட்டு மக்களின் நீர்த்தேவையை போக்க தங்கள் மண்ணில் உள்ள நீரை தருகிறார்கள்.

வடமராட்சிகிழக்கு, வடமராட்சி மக்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை ஆதரிக்கிறார்கள்.

குடாநாடு என்பது இந்த மக்களையும் ஒன்று சேர்த்ததுதான். எனவே தங்கள் உறவுகளுக்காய் தண்ணீர் கொடுப்பதில் இந்த மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.

No comments