உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் நினைவேந்தல்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது.

தியாகதீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(26) யாழ். நல்லூரில் தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வு  உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வெளிவீதியில் தியாகதீபம் திலீபன் 12 தினங்கள் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய இடத்தில் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான முற்பகல்-10.48 மணியளவில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.









அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. பொதுச் சுடரினை மாவீரர்களான மேஜர் தமிழ்மாறன் மற்றும்  மேஜர் வள்ளுவர் ஆகியோரின் பெற்றோர்களான சின்னவன் மற்றும் சரசு ஆகியோர் ஏற்றி வைத்தனர்.


தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கலைச்சுடர், எழிலரருள் ஆகியோரின் தந்தையாரான கந்தசாமி ஏற்றி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு லெப்ரினன் ரெனோல்ட் மற்றும் கப்டன் சூரியனின் தாயார் விநாயகமூர்த்தி செல்வமணி மலர்மாலை அணிவித்தார்.தொடர்ந்து மாவீரர்களான கப்டன் வரதோஜன் மற்றும் மேஜர்  தமிழ் ஆகியோரின் சகோதரன்  திவாகர் திலீபனின் உருவப்படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தி அஞ்சலித்தார்.


அவரைத் தொடர்ந்து மூத்த போராளி காக்கா அண்ணன் ,முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள்,ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தினார்கள்.

















No comments