மைத்திரி மீது பழிசுமத்தி ரணிலை பாதுகாக்கும் கூட்டமைப்பு!

கூட்டமைப்பு ரணிலிடம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த மைத்திரி முதல் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பதாக அமைச்சர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியே ஜனாதிபதி மீது விமர்சனங்களை முன்வைத்து அடுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்பதாகவும் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவில் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசினை தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக கூட்டமைப்பே விமர்சிப்பது நகைப்புக்குரியது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்தவர்கள் தமிழ் மக்கள். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவா இருந்து வந்தது. ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சியை விமர்சித்து வருகின்றது.

விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசுக்கு மேலும் அழுத்தங்களை கொடுத்து, மக்களுக்கு தேவையானவற்றை அல்லது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இருந்தால் அந்த விமர்சனங்கள் வரவேற்கத் தக்கதாக இருக்கும்.

ஆனால் அடுத்த தேர்தலுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக கூட்டமைபை;பு அரசாங்கத்தை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
தற்போது உள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் சிறிலங்கா  சுதந்திரக் கட்சியும், ஜக்கிய தேசிய கட்சியுமாகும். இதுமட்டுமல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சியில் ஏற்றுவதற்கு கூட்டமைப்பு பங்காளியாக இருந்துள்ளது.

இருப்பினும் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் தனியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மட்டும் விமர்சிக்கின்றார்கள். தமது அரசியல் தந்திரம் காரணமாகவே அவர்கள் ஜனாதிபதியை மட்டும் விமர்சிக்கின்றார்கள்.
நல்லாட்சியில் குறை இருந்தால் இரு கட்சியினருக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டமைப்புக்கும் அதில் பங்கு உண்டு. இன்னும் ஆட்சி முடிவடைய ஒன்றரை வருடங்கள் உள்ளது. அதற்குள் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.

ஜனாதிபதியின் மீது தனியே கூட்டமைப்பு விமர்சனங்களை முன்வைப்பதற்கு அவர்களின் அடுத்த கட்ட தேர்தல் களத்தினை எதிர் கொள்வதற்கான யுத்தியாகவே இருக்கின்றது.அதிலும் ரணில் தொடர்பில் வாய் திறக்க மறுக்கின்ற இவர்கள் மைத்திரி மீது அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்னிறுத்தி ரணிலை பாதுகாக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுவது தெரிந்ததே.

No comments