புலிகளுக்கு பயந்து இறுதிப்போரில் தப்பி ஓடவில்லை


போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டதாக சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு சென்றிருந்தார். அவர், 2009 மே 16ஆம் நாள் நாடு திரும்பினார்.

அதிகாரபூர்வ விடயமாக நானும் சீனாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எந்த அழுத்தங்களாலும் நாங்கள் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.

அந்தக் கட்டத்தில் எல்லாமே மிக கவனமாக திட்டமிடப்பட்டிருந்தது. விளைவு நிச்சயம் உறுதியாகி விட்டது.

போரின் இறுதி இரண்டு வாரங்களில், கோப்ரல்களும் சார்ஜன்ட்களும் தான் நிறைய வேலை செய்தனர். களத்தில் எமது கட்டளைகளை அவர்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் இரண்டரை ஆண்டுகள் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை.

இரண்டு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட போரின் சிக்கல்களை இரண்டு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா?

போரின் இறுதி இரண்டு வாரங்களிலும், கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டுக்குச் செல்லவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments