நல்லாட்சியும் ஏமாற்றிவிட்டது - புலம்பும் சம்பந்தன்



கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜப்பானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்திருக்கிறார்.

தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜப்பானிய உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய போதே இரா. சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்று வரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு புதிய அரசியல்யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வை அடையாத பட்சத்தில் இலங்கை முன்னேறிச்செல்லமுடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டுமேயாயின் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.

No comments