பொலிஸ்மா அதிபரை விசாரிக்க மூவரடங்கிய குழு



பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார்.

இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

சிறிகொத்தவில்  நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படுவாரா? என ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, பொலிஸ் மா அதிபரை நியமிப்பதும் விலக்குவதற்குமான அதிகாரம் அமைச்சருக்கன்றி அரசியலமைப்புச் சபைக்கே உண்டு என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.



பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் சுயாதீனமாகவே முன்னெடுக்கப்படுமென்றும் இதில் எவருடைய தலையீடும் இருக்காதென்றும் அமைச்சர் மத்தும பண்டார இதன்போது வாக்குறுதியளித்தார். அத்துடன் விசாரணைகளை இயலுமானவரை துரிதப்படுத்தி அறிக்கையை முன்வைக்குமாறு அமைச்சர் மூவரடங்கிய குழுவுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

No comments