மகிந்தவின் கருத்தால் கூட்டணிக்குள் குழப்பம்


ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் வெளியிட்ட கருத்து அவருக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அதற்கு எதிராகப் போர்கொடி தூக்குவதற்கும் ஒரு பிரிவினர் தயாராகியிருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரர் ஒருவர் போட்டியிடுவார் எனக் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்குவது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியைக் கொடுத்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்திய செவ்வி அவர்களை மேலும் எரிச்சலூட்டியிருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் வேட்பாளர் தெரிவு இருக்கக் கூடாதென உறுதியாகக் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே குமார வெல்கம இதனைத் தெரிவித்தார்.

"குடும்ப ஆதிக்கம் 2015ஆம் ஆண்டில் அவருடைய பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே முன்னாள் ஜனாதிபதி முன்னிலைப் படுத்தினார். இதனால் பல அமைச்சர்கள் கூட அவரை வெறுக்கத் தொடங்கினர். ஆதரவு வழங்கியவர்கள் கூட அவருடைய செயற்பாடுகளால் அதிருப்தியடைந் திருந்தனர். எமது கட்சி எல்லாருக்கும் உரிமையானது. எனவே ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஒரு குடும்பம் மாத்திரம் உரிமை கொண்டாட முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments