அரசியல் கைதிகளின் நிலை மேலும் மோசம்


அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இருவரின் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அனுராதபுர சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்ததை அடுத்து, அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏனைய கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 8 மணி தொடக்கம், மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் பங்கேற்றுமாறும் பொது அமைப்புகள்  அழைப்பு விடுத்துள்ளன.

No comments